அதிமுகவில் குடும்பத்தினர் யாரும் அதிகாரம் செலுத்த முடியாது: டி.டி.வி. தினகரன்

அதிமுகவில் தனி நபரோ, குடும்பத்தினரோ யாரும் அதிகாரம் செலுத்த முடியாது என்று கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்.

அதிமுகவில் தனி நபரோ, குடும்பத்தினரோ யாரும் அதிகாரம் செலுத்த முடியாது என்று கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
அதிமுக துணை பொதுச் செயலாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட தினகரன், அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடத்திய இந்த இயக்கம் சசிகலாவின் வழியில் தங்கு தடையின்றி தொடர்ந்து செயல்படும் என்பதை வலியுறுத்தி கூறிக் கொள்கிறேன்.
சட்டப் பேரவையை விதிகளுக்குட்பட்டே பேரவைத் தலைவர் நடத்தினார். எப்படியாவது சட்டப் பேரவையில் கலவரம் ஏற்படுத்தி, இந்த ஆட்சியை கலைத்து விடலாம் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முயற்சி செய்தார். ஆனால், அது வெற்றிபெறவில்லை.
மு.க.ஸ்டாலின் தோல்வியினால் விரக்தி ஏற்பட்டு எதை எதையோ செய்கிறார். குடியரசுத் தலைவரிடம் அவர் முறையிட்டாலும் அவருக்கு தோல்விதான் மிஞ்சும்.
பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவர் கொடுக்கும் எந்த கடிதமும் செல்லுபடியாகாது. கட்சிக்கு புதிய பொருளாளர் நியமிக்கப்பட்டுள்ளதால் வழக்கம் போல வங்கி கணக்குகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஓ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன் போன்றவர்கள் விலகிப் போய் இருப்பதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், பிரிந்து சென்றவர்கள் யாராக இருந்தாலும் தாய் கழகத்துக்கு வந்தால், தாய் மனதுடன் அவர்களை ஏற்றுக்கொள்வோம்.
மக்கள் மத்தியில் எனக்கு கடும் எதிர்ப்பு இருப்பதாக பேசப்படுவதில் உண்மை இல்லை. சமூக வலைதளங்கள் மூலம் எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு இதுபோனிற பிரசாரத்தை செய்து வருகின்றனர். மக்கள் ஆதரவு எங்களுக்கு என்றும் உண்டு. 2021-ஆம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி மலரும். அப்போது மக்கள் எங்கள் பக்கம் என்பது தெரியவரும்
சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவீர்களா என கேட்கிறார்கள். யார் போட்டியிட வேண்டும் என்று கட்சி முடிவு செய்கிறதோ அவர் அந்தத் தொகுயில் போட்டியிடுவார்.
தீபா அரசியலுக்கு வந்துள்ளது பற்றி நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை.
தி.மு.க.தான் எங்களுக்கு பிரதான எதிரி. ஓ.பன்னீர்செல்வத்தை பயன்படுத்தி இந்த ஆட்சியைக் கலைத்து விடலாம் என்று திட்டம் போட்டார்கள். ஆனால் அதில் தோல்வி அடைந்தார்கள். எங்களது பிரதான எதிரி தி.மு.க.தான்.
சசிகலா குடும்பத்தினர் ஆட்சி, அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் மட்டுமல்ல வேறு சில எதிர்க்கட்சியினரும் பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட கட்சி. எந்த தனி நபரும், குடும்பமும் இங்கு அதிகாரம் செலுத்த முடியாது. அப்படி அதிகாரம் செலுத்தவும் விடமாட்டோம் என்றார் தினகரன்.
இந்தச் சந்திப்பின் போது, மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அ.தி.மு.க. பொருளாளரும், அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், அமைச்சர்கள் செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.

ஒரே நாளில் வரவில்லை பதவி

மறைந்த எம்.ஜி.ஆர். காலத்திலேயே ஜெயலலிதாவால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டவன் நான். 1999-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று 11 ஆண்டு காலம் உறுப்பினராக இருந்து இருக்கிறேன். ஜெயலலிதா பேரவைச் செயலாளராகவும், அமைப்புச் செயலாளராகவும், பொருளாளராகவும் அமர்த்தப்பட்டு பணியாற்றி இருக்கிறேன்.
திடீரென்று வந்தவன் என்று விமர்சனம் செய்கிறார்கள். சில காலம் என்னை ஜெயலலிதா ஒதுங்கி இருக்கச் சொன்னார்கள். போர் வீரனாக இருந்து இந்தக் கட்சிக்கு பணிகளைச் செய்தேன். எனது பணி தேவை என்பதை அறிந்து சசிகலா உள்ளிட்டோர் என்னிடம் கோரிக்கை வைத்தனர். இந்த இக்கட்டான நேரத்தில் என்னை துணை பொதுச்செயலாளராக நியமித்தனர் என்றார்.

சசிகலாவை மாற்ற திட்டமா?

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவை பெங்களூரு சிறையிலிருந்து சென்னைக்கு மாற்றும் திட்டம் ஏதும் இல்லை. என்று துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவிததார்.
கட்சியின் சட்ட விதிப்படிதான் சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நியமித்த நியமனங்கள், நீக்கம் செல்லுபடியாகும். இது மதுசூதனனுக்கும் தெரியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com