இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்: கே. வரதராஜன்

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் சுமார் 5 லட்சம் பேரை பாதிக்கும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றார் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் கே. வரதராஜன்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் சுமார் 5 லட்சம் பேரை பாதிக்கும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றார் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் கே. வரதராஜன்.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள இடத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த பின்னர், புதுகையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
புதுக்கோட்டை வறட்சி மாவட்டம். இந்த மாவட்டத்தில் ஓரளவுக்குப் பசுமையாக இருக்கும் பகுதி நெடுவாசலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களும்தான். இந்நிலையில், இங்கு ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டத்தை செயல்படுத்தினால், நூறு கிராமங்களில் வசிக்கும் 5 லட்சம் மக்களின் வாழ்க்கை கடுமையான பாதிப்புக்குள்ளாகும். ஏற்கெனவே, இங்கு நிலத்தடி நீர்மட்டம் 400 அடியைத் தாண்டிவிட்டது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாயத்துக்கு முழு அளவில் நீரைப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு இங்குள்ள மக்களிடம் எந்தவிதக் கருத்துக் கேட்புக் கூட்டங்களும் நடத்தப்படவில்லை. இது மக்களைப் பற்றி கவலைப்படாத மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
இத்திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது உண்மைதான். மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில்தான் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், தற்போதைய பாஜக அரசு அத்திட்டத்தை ரத்து செய்யாமல் செயல்படுத்துகிறது. தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு எதையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது.
மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும் இத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தவறும்பட்சத்தில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி வெளியேற்றுவோம் என்றார்.
பேட்டியின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ். ஸ்ரீதர், எம். சின்னத்துரை, மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எஸ். பொன்னுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com