குடிநீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் குடிமராமத்துத் திட்டம் அடுத்த மாதம் தொடக்கம்

குடிநீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் வகையிலான குடிமராமத்துத் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
குடிநீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் குடிமராமத்துத் திட்டம் அடுத்த மாதம் தொடக்கம்

குடிநீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் வகையிலான குடிமராமத்துத் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் ரூ.300 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
குடிமராமத்துத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை (பிப்.23) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
குடிமராமத்து என்றால்....: பருவமழை தவறியதால், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சியைச் சமாளிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள நீர் ஆதாரங்களை சிக்கனமாகப் பயன்படுத்தி வறட்சியை எதிர்கொள்ளவும், மழைநீரை திறம்படச் சேமித்தும், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி நீர்வள ஆதார மேலாண்மையை மேம்படுத்தவும், நீர் பயன்பாட்டை முறையாக ஒழுங்குபடுத்தவும், நீர்நிலைகளை மீட்டெடுக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கென அரசிலிருந்து ஓய்வு பெற்ற பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு ஆலோசனைக் குழு அமைக்கப்படும். நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பேரியக்கத்தின் ஒருபகுதியாக முதல் கட்டமாக பண்டைய குடிமராமத்து திட்டத்துக்கு புத்துயிர் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குடிமராமத்து என்பது மக்கள் தங்கள் உழைப்பு மற்றும் பொருள் பங்களிப்பு மூலம் நீர் ஆதாரங்களை நிர்வகித்தலாகும்.
நேரடி நியமனம்: குடிமராமத்துத் திட்டத்தில் வரத்து வாய்க்கால், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள், பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல், கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்தப் பணிகளில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் பணிகள் விவசாயச் சங்கங்கள், பாசன சபைகள், ஆயக்கட்டுதாரர், ஆயக்கட்டுதாரர்களின் தொகுப்பின் மூலம் நேரடி நியமன அடிப்படையில் அவர்களாலேயே மேற்கொள்ளப்படும்.
இந்தப் பணிகள் பொதுப்பணித் துறையால் திட்டம் தயாரிக்கப்பட்டு மக்களால் செயல்படுத்தப்படும். பணிகள் அனைத்தும் பொதுப்பணித் துறையால் கண்காணிக்கப்படும். ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட பணிகள், நீர்வள ஆதாரத் துறையின் மூலம் நடைமுறையில் உள்ள ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.
அடுத்த மாதம் தொடக்கம்: குடிமராமத்துத் திட்டம் மார்ச் முதல் வாரத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் 30 மாவட்டங்களில் 1,519 பணிகள் ரூ.100 கோடி செலவில் செயல்படுத்தப்படும். பெரும்பாலான பணிகளும் ரூ.10 லட்சத்துக்குக் குறைவான மதிப்பீடு என்பதால் பயனாளிகளால் நேரடியாக ஒரே நாளில் தொடங்கப்பட்டு மாநிலம் முழுவதும் ஒரு மக்கள் இயக்கமாக ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படும்.
வரும் நிதியாண்டுகளில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து குடிமராமத்துப் பணிகள் நபார்டு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும். வரும் நிதியாண்டில் இதுபோன்ற பணிகள் ரூ.300 கோடி செலவில் ஏப்ரல்-மே மாதங்களில் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் தொடங்கப்படும்.
இந்தப் பணிகளுக்கு மாவட்டந்தோறும் மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு திட்டத்தைத் தொடங்கி நடைமுறைப்படுத்துவர்.

பொது மக்களும் பங்கேற்கலாம்...!

குடிமராமத்துத் திட்டத்தில் பொது மக்களும் பங்கேற்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு:
குடிமராமத்துத் திட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முன்வரும் வல்லுநர்கள், பொறியாளர்கள், தன்னார்வலர்களையும் ஒருங்கிணைத்து அரசு செயல்பட உள்ளது.
இதற்கான திட்டங்களையும், உத்திகளையும், வழிமுறைகளையும், கொள்கைகளையும் இந்தக் குழு மூலம் வரையறுத்து அதை தமிழக அரசு உரியவாறு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.
இந்தக் குழுவானது தன்னார்வத்துடன் பங்கு கொள்ள தயாராக உள்ள பொது மக்கள், வல்லுநர்கள், பொறியாளர்கள், அரசுக்கு வெளியில் உள்ள ஆர்வமுள்ள வல்லுநர்களின் அனுபவத்தையும், திறமையையும் நீர்வள ஆதார மேம்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளும் அமைப்பாகவும் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com