சட்டப்பேரவை விவகாரத்தில் சாதியை இழுக்காதீர்கள்! பேரவைத் தலைவர் தனபாலுக்கு அம்பேத்ராஜன் கடிதம்

தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைமுறையின் போது நிகழ்ந்த சம்பவத்தில் சாதியை இழுக்காதீர்கள் என்று சட்டப்பேரவைத் தலைவர்
சட்டப்பேரவை விவகாரத்தில் சாதியை இழுக்காதீர்கள்! பேரவைத் தலைவர் தனபாலுக்கு அம்பேத்ராஜன் கடிதம்

தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைமுறையின் போது நிகழ்ந்த சம்பவத்தில் சாதியை இழுக்காதீர்கள் என்று சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபாலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியப் பொருளாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான அம்பேத்ராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபாலுக்கு வியாழக்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 18-ஆம் தேதி சட்டப்பேரவையை நீங்கள் சட்ட விதிகளுக்கு உள்பட்டோ அல்லது ஆளும் கட்சியின் எழுதப்படாத விதிகளுக்கு உள்பட்டோ நடத்திக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட திடீர் பிரச்னைக்கு, "நான் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். அதனால்தான் இங்கு இந்தப் பிரச்னை' என்று விளக்கம் அளித்துள்ளீர்கள்.
"அம்மா கொடுத்த பதவி. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த என்னை அம்மாதான் அரவணைத்தார்கள். இந்த உயர்ந்த நிலைக்கு வர அம்மாதான் காரணம்' என்று கூறி அடைக்கலம் தேட முயற்சித்தீர்கள்.
உங்களுக்கு கொடுக்கப்பட்ட பதவி சாதி அடிப்படையில் அல்ல; உங்களுக்கு தலைமையிடம் இருந்த விசுவாசம், உங்கள் திறமை அல்லது உங்கள் சாதி வாக்குக்காக இருக்கலாம். இத்தகைய உயர்ந்த நிலைக்கு நீங்கள் உயரக் காரணம் டாக்டர் அம்பேத்கர்தான். ஆனால், டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நீங்கள் குறிப்பிடாதது, அவரைப் பற்றி எதுவுமே உங்களுக்கு தெரியவில்லை என்பதைக் காட்டுகிறது.
இனிமேலாவது டாக்டர் அம்பேத்கரைப் பற்றி படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின வகுப்பினரை உயர்த்த வேண்டுமென்றால் உங்கள் சாதியினருக்கு "முதல்வர்' பதவியைத்தான் உங்கள் கட்சித் தலைமை வழங்கியிருக்க வேண்டும். எந்தக் கட்சியும் அப்படி செய்யப்போவது இல்லை என்பதுதான் உண்மை. தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமல் செயல்படும் கட்சிகள்தான்.
இம்மாதிரியான "கலாட்டாக்கள்' நாடாளுமன்றம் முதல் பல மாநில சட்டப்பேரவைகளில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
அவற்றைக் கண்டு மனம் தளராமல் "சபாநாயகர்' (பேரவைத் தலைவர்) செயலாற்ற வேண்டும். எந்த சட்டப்பேரவைகளிலும் யாரும் சாதிப் போர்வையை தேடுவதில்லை.
எனவே, "சாதியை' இழுக்காமல், சட்டப்பேரவை விதிகளை மட்டுமே முன்னிறுத்தி உங்களையும், உங்கள் கட்சியையும் உங்கள் ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் அம்பேத்ராஜன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com