தமிழக எல்லையில் கேரள சோதனைச் சாவடி: தமிழக- கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தேனி மாவட்டம், கம்பம் மெட்டு பகுதியில் கேரளா சோதனைச் சாவடி அமைத்ததால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, வியாழக்கிழமை தமிழக- கேரள அதிகாரிகளுக்கிடையை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கம்பம் மெட்டு பகுதியில் வனத்துறை சர்வே கல் குறித்து ஆய்வு நடத்தும் தமிழக- கேரள அதிகாரிகள்.
கம்பம் மெட்டு பகுதியில் வனத்துறை சர்வே கல் குறித்து ஆய்வு நடத்தும் தமிழக- கேரள அதிகாரிகள்.

தேனி மாவட்டம், கம்பம் மெட்டு பகுதியில் கேரளா சோதனைச் சாவடி அமைத்ததால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, வியாழக்கிழமை தமிழக- கேரள அதிகாரிகளுக்கிடையை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், மார்ச் 6-ஆம் தேதி எல்லையை சர்வே செய்ய முடிவு செய்யப்பட்டது.
கம்பம் மெட்டு பகுதியில் தமிழக எல்லையில் புதன்கிழமை திடீரென கேரள சுங்கத் துறையினர் சோதனைச் சாவடி அமைக்க முயன்றனர். இதை தடுத்த தமிழக வனத்துறையினர் மீது கேரள அதிகாரிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை தமிழக, கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், தமிழகத்தின் சார்பில் உத்தமபாளையம் வட்டாட்சியர் குமார், மாவட்ட உதவி வன அலுவலர் விஜயகுமார், ரேஞ்சர் சுரேஷ், உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாமலை, நில அளவை வட்டாட்சியர் நசீம் மிஷா, வட்டார அளவையாளர் மணிகண்டன், கேரளம் சார்பில் உடுப்பன்சோலை வட்டாட்சியர் பானுக்குமார், கட்டப்பனை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜ்மோகன், சுங்கத்துறை உதவி ஆணையர் ஜேக்கப் ஜோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தமிழக- கேரள அதிகாரிகள் அப்பகுதியில் சர்வே கல் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, சர்வே கல் பல இடங்களில் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால், தமிழக அதிகாரிகள் வேறு இடத்திலிருக்கும் நிலையான சர்வே கல்லிலிருந்து சர்வே துவங்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும், வரைபடங்களையும், ஆவணங்களையும் கேரள அதிகாரிகளிடம், தமிழக வனத்துறையினர் காட்டி விளக்கினர்.
பின்னர் கேரள வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தமிழகத்தின் சார்பில் வனத்துறைக்கு சொந்தமான எல்லைக்கல் குறித்து விளக்கப்பட்டது. கேரளாவின் பகுதி வருவாய்த் துறை பட்டா நிலம் என்பதால், கூடுதல் ஆவணங்களை பெற கால அவகாசம் வேண்டும் என்று கேரள அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு தரப்பினரும் முழுமையான ஆவணங்களுடன் மார்ச் 6-ஆம் தேதி கூடுவது எனவும், அப்போது சர்வே செய்து எல்லையை உறுதி செய்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதுவரை தாற்காலிக சோதனைச் சாவடி குறித்து கேரளா எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று அம்மாநில அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனிடையே, தமிழக- கேரள எல்லையில் 2 மாநில போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com