தொழிலாளர் நலச் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படாததற்கு அரசியல்வாதிகளே காரணம்

தாராளமய பொருளாதாரத்தில் தொழிலாளர் நலச் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படாததற்கு அரசியல்வாதிகளே காரணம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
தொழிலாளர் நலச் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படாததற்கு அரசியல்வாதிகளே காரணம்

தாராளமய பொருளாதாரத்தில் தொழிலாளர் நலச் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படாததற்கு அரசியல்வாதிகளே காரணம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
அனைத்து தொழிற்சங்கங்களின் மாநாடு சென்னை காமராஜர் அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் தாற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 480 நாள்களுக்கு மேல் பணியாற்றியிருந்தால் அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், தாற்காலிக தொழிலாளர்கள், பதிலி தொழிலாளர்கள், பயிற்சி தொழிலாளர்கள் என எந்தப் பெயரில் பணியாற்றினாலும் "சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியது:
இந்தியாவில் நிரந்தத் தொழிலாளர்களைக் காட்டிலும் தாற்காலிக, ஒப்பந்த ஊழியர்கள்தான் அதிகம் உள்ளனர். இந்நிலையில், உழைக்கும் தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்படுகின்றன. இதற்கு முதலாளித்துவமும், தாராளமயமாக்கலும் முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
முதலாளித்துவம் என்பது அரசியல் சர்ச்சைக்குரியது. ஆனால் தாராளமயமாக்கலால்தான் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்பது தவறு. ஜெர்மனி உள்பட உலகின் பல நாடுகளில் தாராளமயமாக்கல் பொருளாதாரம் அமலில் உள்ளது. அங்கு அரசைக் காட்டிலும் தனியார்தான் பெரும்பாலான நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அங்கு "சம வேலை - சம ஊதியம்', குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களும் அனைத்தும் முறையாக அமல்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் இதுபோன்ற சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படாததே, ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம். அதற்கு அரசுகளும், அரசியல்வாதிகளுமே காரணம். ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வரைமுறையை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.
நீதிபதி அரிபரந்தாமன் பேசியது:
இந்தியாவில் 1970 -ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்ட பின்புதான், ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 1976 -ஆம் ஆண்டு துப்புரவுத் தொழிலாளர், பாதுகாவலர்கள் உள்ளிட்டப் பிரிவுகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்து மத்திய அரசு சட்டம் பிறப்பித்தது. ஆனால் அந்தச் சட்டத்தை 2001 -ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
1970 -களில் தொழிற்சங்கப் போராட்டங்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் நடைபெறும். தற்போது அதுபோன்று இல்லை. ஒரு நிறுவனத்தில் பெரும்பாலானோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருப்பதே அதற்கு காரணம்.
குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் நிரந்தரத் தொழிலாளர்களோ கிடைத்த வரை போதும் என்று எண்ணுகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்தல் சட்டத்தை முழுவதுமாக ரத்து செய்தால்தான், ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com