புதிய குடும்ப அட்டை வழங்க ரூ.4,000 லஞ்சம்: வட்ட வழங்கல் அலுவலர், வருவாய் ஆய்வாளர் கைது

புது ரேஷன் கார்டு வழங்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

புது ரேஷன் கார்டு வழங்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வாழவந்திநாடு பகுதியைச் சேர்ந்த ராமு மகன் சண்முகம் (32). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர் தனது உறவினருக்கு புதிய குடும்ப அட்டை கேட்டு, கொல்லிமலை வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்துள்ளார்.
அதனைப் பரிசீலனை செய்த வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர் ரூ.5,000 லஞ்சம் தந்தால், புதிய குடும்ப அட்டை வழங்க ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இறுதியில் ரூ.4,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சண்முகம் நாமக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
காவல் துறை அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய ரூ.4,000-க்கான நோட்டுகளை வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் மற்றும் வருவாய் ஆய்வாளர் லோகநாதன் ஆகியோரிடம் வியாழக்கிழமை மாலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து சண்முகம் கொடுத்துள்ளார். அந்த பணத்தைப் பெற்றுக் கொண்டதும், அங்கே மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினர் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் மற்றும் வருவாய் ஆய்வாளர் லோகநாதன் இருவரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com