மகா சிவராத்திரி: வழிபட வேண்டிய நவ கைலாயத் திருத்தலங்கள்

மகா சிவராத்திரி தினத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரவருணி ஆற்றங்கரைகளில் உள்ள நவ கைலாயத்

மகா சிவராத்திரி தினத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரவருணி ஆற்றங்கரைகளில் உள்ள நவ கைலாயத் தலங்களில் பக்தர்கள் வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது.
புண்ணிய மலையான பொதிகை மலையில் தவம் புரிந்து வந்த மாமுனிவர் அகத்தியரின் பிரதான சீடரான உரோமச முனிவர், தன் குருவின் துணை கொண்டு சிவபெருமான் காட்சி பெற்று முக்தி அடைய விரும்பினார். அதை அறிந்துகொண்ட அகத்திய முனிவர் அவரிடம் அதற்கான வழிமுறைகளைக் கூறினார். அதன்படி, உரோமச முனிவர் தாமிரவருணி சங்கமிக்கும் இடத்தில் நீராடி சிவபெருமானை வழிபட்டார். பின்னர் நவகோள் வரிசையில் சிவபெருமானை வழிபடப் புறப்பட்டார். எந்தெந்த இடங்களில் வழிபட வேண்டும் என அடையாளம் காட்டுவதற்காக, தாமிரவருணி நதியில் 9 மலர்களை அகத்திய மாமுனிவர் மிதக்கவிட்டார். அந்த மலர்கள் பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி மற்றும் சேர்ந்தபூமங்கலம் ஆகிய இடங்களில் தாமிரவருணி நதிக்கரைகளில் துங்க, அவ்விடங்களில் சிவலிங்கத்தை உரோமச முனிவர் வைத்து வணங்கி முக்தி பெற்றார் என்கிறது புராணம்.
நவ கைலாயத் தலங்கள்
பாபநாசம் (சூரியன்): நவகைலாய திருத்தலத்தில் முதலாவதாக பாபநாசம் இருக்கிறது. இது திருநெல்வேலியிலிருந்து மேற்கே 45 கி.மீட்டர் தொலைவில் பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் உலகாம்பிகை.
சேரன் மகாதேவி (சந்திரன்): இத்திருத்தலம் பாபநாசத்திலிருந்து கிழக்கே 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் ஆவுடைநாயகி.
கோடகநல்லூர் (செவ்வாய்): இக்கோயில் சேரன்மகாதேவியிலிருந்து திருநெல்வேலி சாலையில் 15 கிமீ. தொலைவில் கல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் சிவகாமி.
குன்னத்தூர் (ராகு): இக்கோயில் திருநெல்வேலி நகரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் சிவகாமி.
முறப்பநாடு (குரு): இக்கோயில் திருநெல்வேலிலிருந்து தூத்துக்குடிக்கு செல்லும் சாலையில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் சிவகாமி.
ஸ்ரீவைகுண்டம் (சனி): இக்கோயில் முறப்பநாடு கோயிலிலிருந்து கிழக்கே 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு நவதிருப்பதி தலங்களில் முதல் திருத்தலம் அமைந்தள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் சிவகாமி.
தென்திருப்பேரை (புதன்): இக்கோயில் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில்  ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 8ஆவது கி.மீட்டரில் அமைந்துள்ளது. இங்கு நவதிருப்பதி திருத்தலத்தின் 7ஆவது திருத்தலம் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் அழகிய பொன்னம்மை.
இராஜபதி (கேது): இக்கோயில் தென்திருப்பேரையிலிருந்து 6ஆவது கி.மீட்டரில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் அழகிய பொன்னம்மை.
சேர்ந்தபூமங்கலம் (சுக்கிரன்): இக்கோயில் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் புன்னக்காயல் செல்லும் வழியில் அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் செளந்தர்யநாயகி. இத்தலம் தாமிரவருணி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் உள்ளது.
அனைத்து சிறப்புகளையும் ஒருங்கே பெற்ற நவ கைலாயத் தலங்களில் மகா சிவராத்திரி தினமான வெள்ளிக்கிழமை (பிப். 24) சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com