மனநலம் குன்றிய சிறுமி பலாத்காரம்: விசைத்தறித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

மனநலம் குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விசைத்தறித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருப்பூர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

மனநலம் குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விசைத்தறித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருப்பூர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் எஸ்.மாதேஸ்வரன் (52). இவர் அப்பகுதியில் உள்ள விசைத்தறிக் கூடத்தில் வேலை செய்து வந்தார். இவரது வீட்டின் அருகே கணவரை இழந்த பெண் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு, 15 வயதில் மனநலம் குன்றிய மகள் உள்பட மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில், மூத்த மகளுக்குத் திருமணமாகி விட்டது. மகன் வெளியூரில் தங்கி வேலை செய்கிறார். ஒரு மகள் பள்ளிக்கு செல்ல, மனநலம் குன்றிய சிறுமி மட்டும் வீட்டில் இருப்பார்.
எனவே, வேலைக்கு செல்லும்போது அந்தப் பெண், அருகில் வசிக்கும் மாதேஸ்வரன் குடும்பத்தாரிடம், அந்தச் சிறுமியை பார்த்துக் கொள்ளுமாறு கூறிச் செல்வாராம். மாதேஸ்வரனின் மனைவி உள்ளிட்டோரும் அந்தச் சிறுமியை தங்களது வீட்டுக்கு அழைத்து செல்வது வழக்கமாம்.
இந்நிலையில், கடந்த 2015 மே 15-ஆம் தேதி, வீட்டிலிருப்பவர்கள் ஊருக்குச் சென்றுவிட மாதேஸ்வரன் மட்டும் தனியாக இருந்துள்ளார். வழக்கம்போல, மனநலம் குன்றிய சிறுமியைப் பார்த்துக் கொள்ளுமாறு அவரது தாய் கூறிச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாதேஸ்வரன், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.
தொடர்ந்து, அந்த மாதம் 28-ஆம் தேதி வரை 4 முறை சிறுமி தனியாக இருப்பதைப் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். மே 28-ஆம் தேதி சிறுமி மாதேஸ்வரனின் நடவடிக்கைகள் குறித்து தனக்குத் தெரிந்த வகையில் சிறுமி அவரது தாயிடம் விளக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து, காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், மாதேஸ்வரன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரைக் கைது செய்தனர்.
இவ்வழக்கு திருப்பூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், குற்றம் சுமத்தப்பட்ட மாதேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிபதி முகமது ஜியாபுதீன் தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com