மீனவர் வலையில் ஒரு டன் எடையுள்ள கொம்புத் திருக்கை மீன் சிக்கியது

காரைக்கால் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்தபோது, வலையில் சிக்கிய ஒரு டன் (ஆயிரம் கிலோ) எடையுள்ள பிரம்மாண்ட கொம்புத் திருக்கை மீனை வியாழக்கிழமை கரைக்கு கொண்டு வந்தனர்.

காரைக்கால் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்தபோது, வலையில் சிக்கிய ஒரு டன் (ஆயிரம் கிலோ) எடையுள்ள பிரம்மாண்ட கொம்புத் திருக்கை மீனை வியாழக்கிழமை கரைக்கு கொண்டு வந்தனர்.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற சில விசைப்படகுகள், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு வியாழக்கிழமை காலை வந்தன. காசாக்குடிமேடு கோவிந்தசாமி என்பவரது படகில் சுமார் ஒரு டன் எடையுள்ள கொம்புத் திருக்கை மீன் ஒன்று இருந்தது.
பிரம்மாண்ட உருவமைப்புடன் கூடிய அந்த திருக்கை மீனை கயிறு கட்டி, கிரேன் போன்ற படகிலுள்ள இழுவை மூலம் தூக்கினர். வாகனத்தில் ஏற்ற முடியாத நிலையில் உருவமைப்பு இருந்ததால், திருக்கையின் முக்கிய பாகங்களை அறுத்து அகற்றினர். பின்னர், அந்த மீனை முகவரிடம் ரூ. 1.20 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனை செய்தனர். இதுகுறித்து மீனவர்கள் கூறியது:
ஆழ்கடல் மீன்பிடிப்பின்போது கடலில் விரிக்கப்பட்ட வலையில் இந்த திருக்கை மீன் சிக்கியது. பொதுவாக சிறிய வகை திருக்கை மீன்களே கடலின் மேல்பரப்புக்கு வருவது வழக்கம். இதுபோன்ற மிகப்பெரிய திருக்கை வகைகள், கடலுக்கு ஆயிரம் அடி கீழ் பகுதியில் வசிக்கக் கூடியதாகும். கடலுக்கடியில் உள்ள பாறைகளுக்கிடையே தங்கும். இது, கடலின் மேல்பரப்புக்கு வருவது அரிது. வழக்கமான மீன்களுக்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் இது சிக்கியது. படகில் இருந்த 15 பேர் சேர்ந்து, இழுவை மூலம் படகில் ஏற்றிக் கொண்டு வந்தோம். இது கொம்புத் திருக்கை வகையைச் சேர்ந்தது. இதை பெரும்பாலும் கருவாடாக்கி விடுவார்கள் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com