அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: முதல்வர் உறுதி

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக, கோவையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் மேலும் கூறியது:
கோவை பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ரூ. 3,523 கோடியில் நிறைவேற்றுவேன் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதற்காக, முதல்கட்டமாக ரூ. 3.27 கோடியை அவர் ஒதுக்கியிருந்தார்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெருகி, அதன் மூலம் விவசாயிகள் பயன் பெறுவார்கள். குடிநீர்த் தேவையும் பூர்த்தி செய்யப்படும். எனவே, மத்திய அரசின் அனுமதியைப் பெற்று விரைவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
அதைப் போலவே, கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலான மேற்கு புறவழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆத்துப்பாலம் - உக்கடம் இடையே, ரூ. 168 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். அவிநாசி - சின்னியம்பாளையம் இடையே மேம்பாலம் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. காந்திபுரம் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும். சாய்பாபா காலனி - மேட்டுப்பாளையம் இடையே நான்கு வழிச் சாலை அமைக்கப்படும். மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மோனோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும்.
அதேபோல, ஈச்சநாரி - பொள்ளாச்சி நான்கு வழிச் சாலை பணிகள் ரூ. 500 கோடியில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கோவை அரசு மருத்துவமனையை ரூ. 300 கோடி செலவில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 576 கோடியில் 10,888 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும்.
வெள்ளலூரில் ரூ. 125 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால் போன்ற இடங்களில் ரூ. 80 கோடி செலவில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கோவைக்கு ரூ. 100 கோடி செலவில் 3-வது குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூ. 1,550 கோடி செலவில் மழைநீர் வடிகால் வசதிகள் செய்யப்படும். தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் ரூ. 130 கோடி செலவில் நடைபெற்று வரும் பவானி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றார்.
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், எம்.பி.க்கள் நாகராஜன், சி.மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com