எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன்: ம. நடராசன்

நான் எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன் என்றார் புதிய பார்வை இதழ் ஆசிரியர் ம. நடராசன்.
விழாவில் மாணவர்கள் ரத்த தானம் வழங்குவதைப் பார்வையிட்ட ம. நடராசன் உள்ளிட்டோர்.
விழாவில் மாணவர்கள் ரத்த தானம் வழங்குவதைப் பார்வையிட்ட ம. நடராசன் உள்ளிட்டோர்.

நான் எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன் என்றார் புதிய பார்வை இதழ் ஆசிரியர் ம. நடராசன்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூரில் மருதப்பா அறக்கட்டளை, தஞ்சைத் தமிழ்ச் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கும் விழாவில், அவர் மேலும் பேசியது:
சூழ்நிலை, நெருக்கடியைக் கடந்து வாழ்பவன்தான் மனிதன். ஜெயலலிதா நாட்டுக்காக வாழ்ந்து, இக்கட்டான நிலையில் இறந்துள்ளார். அவர் இறந்து விட்டதால், உயிருடன் இருந்த காலத்தில் அவரைப் பார்க்காதவர்கள், உதவி செய்யாதவர்கள், திட்டியவர்கள் இப்போது, அவருக்கு நான்தான் எல்லாம் எனக் கூறிக் கொண்டு வருவதைத் தமிழ்நாடே பார்க்கிறது.
டி.டி.வி. தினகரன் சொல்வதைப் போல, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் விதமாக திரும்பி வர வேண்டும்.
பெரிய ஆத்மா போய் விட்டதால் யார், யாரோ ஆட்சியைப் பிடிக்க முன்வருகின்றனர். தமிழ்நாட்டை கபளீகரம் செய்யத் திட்டமிடுகின்றனர்.
நான் வெளியில்தான் இருப்பேன். எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன். ஆனால், செய்ய வேண்டியதைச் சரியான நேரத்தில் உட்கார்ந்த இடத்திலிருந்தே சாதித்துக் காட்டுவேன்.
தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டு, சுற்றியுள்ள கிராமங்களுக்கு உதவி செய்யப்படும்.
இதேபோல, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக உதவும் விதமாக 5 ரத்த மாற்று சிகிச்சை இயந்திரங்கள் கனடா நாட்டிலிருந்து கொண்டுவரப்படவுள்ளது. இது, ஜூன் மாதத்தில் செயல்பட தொடங்கும் என்றார் நடராசன்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: ஜெயலலிதா தனது உடல்நிலையைக் கூட கருத்தில் கொள்ளாமல், நாட்டு மக்களுக்காக உழைத்தார். நீண்டகாலம் இருப்பார் என எதிர்பார்த்தேன்.
ஆனால், அதற்கு முன்பே அவர் இறந்து விட்டார். அவரது மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட நிலைமை அனைவருக்கும் தெரியும். தீயசக்தியை தமிழக மக்கள் உணர்ந்துள்ளனர். அந்தத் தீயசக்தியை அதிமுகவின் கடைசி தொண்டன் வரை விடமாட்டான் என்றார் நடராசன்.
விழாவில், மூத்த வழக்குரைஞர் தஞ்சை அ. ராமமூர்த்தி, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், மதிமுக மாவட்டச் செயலர் கோ. உதயகுமார், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அ. நல்லதுரை, பேராசிரியர் அ.வ. ராஜகோபால், விளார் சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com