"குடும்ப ஆதிக்கத்தில் இருந்து அதிமுகவை மீட்போம்'

அதிமுகவை ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் இருந்து மீட்க தர்மயுத்தத்தை தொடங்கி உள்ளோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தண்டையார்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நலஉதவிகள் வழங்கும் விழாவில் பேசுகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். உடன் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.நட்ராஜ், முன்னாள் அமைச்சர்கள் இ.மதுசூதனன், சி.பொன்
தண்டையார்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நலஉதவிகள் வழங்கும் விழாவில் பேசுகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். உடன் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.நட்ராஜ், முன்னாள் அமைச்சர்கள் இ.மதுசூதனன், சி.பொன்

அதிமுகவை ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் இருந்து மீட்க தர்மயுத்தத்தை தொடங்கி உள்ளோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதிமுக வடசென்னை மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு முன்னாள் அமைச்சர் இ.மதுசூதனன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலிவடைந்தோருக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுமார் 10 ஆயிரம் பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர், 16 லட்சம் உறுப்பினர்களாக இருந்த அதிமுகவை சுமார் ஒன்றரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கமாக ஜெயலலிதா மாற்றினார். மேலும் இந்தக் கட்சியோ அல்லது ஆட்சியோ ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் கைகளுக்குச் சென்றுவிடக் கூடாது என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதன் அடிப்படையில் தான் மக்கள் இயக்கமாக, தொண்டர்களின் இயக்கமாக அதிமுக இருந்து வந்தது.
ஆனால், இன்று ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு மாறாக கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது. எனவேதான் ஜெயலலிதாவின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் குடும்ப ஆதிக்கத்தில் இருந்து மீட்கும் தர்மயுத்தத்தைத் தொடங்கியுள்ளோம். இதில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
நீதிவிசாரணை தேவை: ஜெயலலிதாவின் மரணம் குறித்து மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். எனவே அதில் உள்ள மர்மங்களுக்கு விடையளிக்கும் வகையில் நீதி விசாரணையை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீபாவுக்கு தொடர்ந்து அழைப்பு: தீபா தனி இயக்கம் தொடங்குவது குறித்து கருத்து கூறவிரும்பவில்லை. ஆனால், அவர் எங்கள் பக்கம் வருவதைத் தொடர்ந்து வரவேற்கிறோம். தீபாவின் சகோதரர் தீபக் தெரிவித்துள்ள கருத்து அவரது தனிப்பட்ட கருத்துகளே.
122 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவர்கள் பக்கம் இருந்தாலும் மக்களும், தொண்டர்களும் எங்கள் பக்கம்தான் உள்ளனர். கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளர் இறந்துவிட்டால் புதிய பொதுச்செயலாளரை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவரை தலைமைக் கழக நிர்வாகிகள்தான் கட்சியை நிர்வகிக்க வேண்டும்.
பொதுக்குழுவைக் கூட்டும் எண்ணம் தற்போது எங்களுக்கு இல்லை. கட்சியின் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றும் முயற்சியிலும் ஈடுபடமாட்டோம். ஆனால், தானாகவே அது எங்களிடம் வந்து சேரும் என்றார் பன்னீர்செல்வம்.
விழா ஏற்பாடுகளை வடசென்னை வடக்கு மாவட்ட
ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் செய்திருந்தார். இதில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.சண்முகநாதன், பாண்டியராஜன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன், நடிகர்கள் ராமராஜன், தியாகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com