கட்டண விவரங்களை இணையத்தில் வெளியிடுவது கட்டாயமாக்கப்படும்

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் தாங்கள் வசூலிக்கும் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிடுவது கட்டாயமாக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யூ.ஜி.சி.) செயலர் ஜஸ்பால் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
கட்டண விவரங்களை இணையத்தில் வெளியிடுவது கட்டாயமாக்கப்படும்

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் தாங்கள் வசூலிக்கும் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிடுவது கட்டாயமாக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யூ.ஜி.சி.) செயலர் ஜஸ்பால் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற அவினாசிலிங்கம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம்
கூறியதாவது:
உயர்கல்வித் துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒருபகுதியாக, நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், மாணவர் சேர்க்கை விதிமுறைகள், கல்விக் கட்டணம், சேர்க்கை நடைமுறைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தங்களது இணையதளத்தில் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற்காக 2 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விவரங்களை பொதுத்தளத்தில் வெளியிடாத பல்கலைக்கழகங்கள் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலில் வைக்கப்படும். இதன் மூலம் கல்வி நிறுவனத்துக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால், அனைத்து பல்கலைக்கழகங்களும் தங்களது கட்டண விவரங்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதேபோலவே, மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதல் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்கள் வரையிலான அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களையும் தேசியக் கல்விக் களஞ்சியத்தில் சேகரித்து வைப்பதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த சில மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும்.
அதன் பிறகு, ஒவ்வொரு மாணவரின் சான்றிதழ்களும் தனித்தனி கடவுச் சொற்கள் மூலம் பாதுகாக்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் வேலைக்குச் சேரும் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் சான்றிதழ்களை எளிமையான முறையில் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள வி.எஸ்.செüஹான் குழு பரிந்துரைகள் யு.ஜி.சி.க்கு வந்துள்ளன. இந்தப் பரிந்துரைகள் அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பப்படும்.
மாணவர்கள் வீடுகளில் இருந்தே கல்வி பெறுவதற்கு வசதியாகத் தொடங்கப்பட்டுள்ள ஸ்வயம்பிரபா கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்புகள், டி.டி.எச். சேவை வழியாக விரைவில் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பாடத் திட்டங்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை தரம் உயர்த்தப்படும். மேலும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்தக் கல்வித் தொலைக்காட்சி பாடத் திட்டங்களில் இருந்து 20 சதவீத பாடங்களை எடுத்து நடத்தவும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
மாநிலப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அந்தந்த மாநில அரசுகள்தான் கவனம் செலுத்த வேண்டும். மானியக் குழுவின்கீழ், வரும் பல்கலைக்கழகங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக தன்னாட்சி அதிகாரம் பெற்ற கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com