திருச்சி, வேப்பந்தட்டை, ஆலங்குடியில் ஜல்லிக்கட்டு: 590 காளைகள் பங்கேற்பு; 55 பேர் காயம்

திருச்சி மாவட்டம், கூத்தைப்பார், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, புதுகை மாவட்டம் ஆலங்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 590 காளைகள் பங்கேற்றன. இவற்றை அடக்க முயன்ற 55 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.
ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வரும் காளையை அடக்கும் வீரர்.
ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வரும் காளையை அடக்கும் வீரர்.

திருச்சி மாவட்டம், கூத்தைப்பார், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, புதுகை மாவட்டம் ஆலங்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 590 காளைகள் பங்கேற்றன. இவற்றை அடக்க முயன்ற 55 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.
கூத்தைப்பாரில்...: திருச்சி மாவட்டம், கூத்தைப்பாரில் சிவராத்திரிக்கு மறுநாள் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டும் அதேபோல் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியே முனியாண்டவர் கோயில் காளை முதலில் அவிழ்த்துவிடப்பட்டது. தொடர்ந்து கூத்தைப்பார் கிராமத்தைச் சுற்றியுள்ள பரிவார தெய்வங்களின் 16 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. பின்னர், பதிவு செய்யப்பட்ட 302 காளைகள் பங்கேற்றன.
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் களமிறங்கிய 381 மாடுபிடி வீரர்கள், களத்தில் சீரிய காளைகளை அடக்கினர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் கிராமம் சார்பில் மின்விசிறிகள் பரிசாக வழங்கப்பட்டன. இதில் 17 வீரர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.
ஜல்லிக்கட்டையொட்டி, எஸ்.பி. தலைமையில் 350 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வேப்பந்தட்டை...: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அன்னமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 164 காளைகள் பங்கேற்றன.
பெரம்பலூர், திருச்சி, சேலம், ஆத்தூர், துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 275 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கி பரிசுகளை வெற்றனர். மேலும், போட்டியில் கலந்துகொண்ட ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 9 பேர் காயமடைந்தனர்.
ஆலங்குடியில்...: ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதி பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், வாடிவாசலில் இருந்து 124 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று துள்ளிவந்த காளைகளை அடக்கினர். போட்டியில் பங்கேற்ற 29 பேர் காயமடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com