ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனக்கூறி அறப்போராட்டத்தை அப்பகுதி மக்கள் தொடங்கியுள்ளனர்.
நெடுவாசலில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள்.
நெடுவாசலில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள்.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனக்கூறி அறப்போராட்டத்தை அப்பகுதி மக்கள் தொடங்கியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, அப்பகுதி விவசாயிகள், கிராமத்தினர் கடந்த ஒரு வாரமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மாணவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 8 நாட்களாக நெடுவாசலில் நடைபெற்றுவரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக நெடுவாசலில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலத்தின் அருகே சனிக்கிழமை பந்தல் அமைத்து அமர்ந்து பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமான மக்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதி இளைஞர்கள், மாணவர்கள் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வடகாடு, கீரமங்கலம், புள்ளான்விடுதி உள்ளிட்ட பகுதியில் விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர். விடுமுறை தினம் என்பதால் அப்பகுதி மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்றனர். மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்யும் வரை தொடர்ந்து அறப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.
அமைச்சர், எம்.பி. ஆய்வு: இந்நிலையில் நெடுவாசல் பகுதிக்கு சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிவகங்கை மக்களைவை உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் அப்பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது:

நெடுவாசலில் போராடிவரும் மக்களுக்கு ஆதரவாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளிக் குழந்தைகள்.


காவிரிப் பாசனப்பகுதிகளில் மீத்தேன் பிரச்னை உருவெடுத்தபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழக விவசாயிகளைப் பாதிக்கும் மீத்தேன் திட்டத்துக்குத் தடைவிதித்தார். அதேபோல, தற்போது ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டம் இப்பகுதி விவசாயிகளை பெரிதும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், தமிழக விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்றார்.
இதைத் தொடர்ந்து, சிவகங்கை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் கூறியது: நெடுவாசல் பகுதி விவசாயிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு அதிமுக எம்பிக்கள் அனைவரும் இந்தத் திட்டத்துக்கு எதிராக மக்களவையில் குரல் கொடுப்போம் என்றார்.
ஆட்சியர் சு. கணேஷ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com