குடிசை மாற்று வாரிய வீடுகள் விற்கப்படும் அவலம்

சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு திருவொற்றியூரில் அமைக்கப்பட்ட குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் பெரும்பாலானவை விற்பனை செய்யப்பட்டுவிட்ட நிலையில் சுனாமி மறுவாழ்வு, மறுகுடியமர்த்தல் திட்டங்
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு வீடுகள்.
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு வீடுகள்.

சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு திருவொற்றியூரில் அமைக்கப்பட்ட குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் பெரும்பாலானவை விற்பனை செய்யப்பட்டுவிட்ட நிலையில் சுனாமி மறுவாழ்வு, மறுகுடியமர்த்தல் திட்டங்கள் இலக்கினை எட்டாத நிலை ஏற்பட்டுள்ளது.
2004,டிசம்பர் 26 சுமார் 7 மணியளவில் ராட்சத அலைகள் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை தாக்கின. பனை மர உயரத்திற்கு எழுந்த ஆழிப்பேரலைகள் மீன்பிடித் துறைமுக வளாகம், கடலோர குடிசைவாசிகளின் குடியிருப்புகளை வாரிச் சுருட்டி கடலில் கரைத்தது. ஒரு சில நிமிடங்களில் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்த
ஆயிரக்கணக்கானோர் திக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதன்பிறகுதான் தாக்கியது சுனாமி என்பதே இங்கு வசித்த மக்களுக்குத் தெரியவந்தது. இதன்பிறகு இவர்களை மீட்டெடுக்கு பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தமிழக அரசு சுனாமி மறு குடியமர்த்தல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. முதல்கட்டமாக வீடுகளை இழந்த சுமார் 2,200 குடும்பங்கள் கணக்கிடப்பட்டன. பின்னர் கடலோரத்தில் வசித்து வந்த மக்களுக்கும் மறுகுடியமர்த்தல் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது 12 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் ஆழிப் பேரலையின் கோரப்பிடியில் சிக்கியவர்களை மீட்டெடுக்க மறுவாழ்வு, மறுகுடியமர்த்தல் திட்டங்கள் என்னவாயிற்று?
கார்கில் வெற்றி நகர்: வடசென்னையில் காசிமேடு, திடீர்நகர், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டோர் திருவொற்றியூர் கார்கில் நகரிலும், தென்சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செம்மஞ்சேரி கண்ணகி நகரிலும் மறு குடியமர்த்தும் திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதில் காசிமேடு பகுதியில் வீடுகளை இழந்த சுமார் 2200 குடும்பங்கள் மீட்கப்பட்டு உடனடியாக திருவொற்றியூர் கார்கில் நகரில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டனர். இப்பகுதி தாழ்வான பகுதி என்பதால் அடுத்தடுத்துப் பெய்த மழையால் கூடாரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதனையடுத்து மாநகராட்சி சார்பில் தார் ஷீட்டுகளாலான கூரை வேயப்பட்ட குடியிருப்புகள் வரிசையாக அமைக்கப்பட்டன. இதற்கிடையே நிரந்தர குடியிருப்புகளைக் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தார் ஷீட்டால் அமைக்கப்பட்ட கூரை வீடுகள் அடுத்தடுத்து ஏற்பட்ட தீவிபத்துகளில் முற்றிலுமாகச் சாம்பாலாயின.
நாடோடிகளாகத் திரிந்த மக்கள்: பின்னர் குறைந்த அளவு வசதிகள் நிரந்தர வீடுகள் (நங்ம்ண் டங்ழ்ம்ஹய்ங்ய்ற் நட்ங்ப்ற்ங்ழ்ள்) என்ற பெயரில் எண்ணூர் அனல்மின் நிலையம் எதிரில் வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இதன்படி 180 சதுரஅடியில் தனித்தனி வீடுகளாக அவசரம் அவசரமாக கட்டமைக்கப்பட்ட இவ்வீடுகளில் தீவிபத்திலிருந்து மீண்ட குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. இதனைச் சுற்றிலும் புதர்மண்டிக் கிடந்ததால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் அச்சத்திற்கு இம்மக்கள் ஆளாயினர் என்பதும், தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் வழங்கிவந்த நிவாரண உதவியில்தான் இவர்களது வாழ்வாதாரம் தொடர்ந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நிரந்தர அடுக்குமாடி வீடுகள்: அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டதையடுத்து சுமார் 4 ஆண்டுகளுக்குப் முன்பு படிப்படியாக இம்மக்கள் நிரந்தரவீடுகளில் குடியமர்த்தப்பட்டனர். மேலும் பாதாளச் சாக்கடைத் திட்டம், குடிநீர் தொட்டிகள், மார்க்கெட், மீன்விற்பனைக்கூடம், அங்கன்வாடி, தொடக்கப்பள்ளிகள் என
அனைத்து வசதிகளும் நிரம்பியவையாக இவ்வளாகம் காட்சியளித்தன. மேலும் சுமார் 400 பேருக்கு தண்டையார் பேட்டையில் அமைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து சுனாமி மறுவாழ்வு குடியமர்த்தல் திட்டங்கள் நிறைவு பெற்று தற்போது மாநகராட்சி, குடிசைமாற்று வாரிய நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
விலையில்லா வீடுகள் விற்கப்பட்ட அவலம்: நிவாரணங்கள், தாற்காலிக கூடாரங்கள், கூரை வேயப்பட்ட வீடுகள், பாதி நிரந்தர வீடுகள் என தொடர்ந்து சுமார் எட்டு ஆண்டுகள் வரை பல்வேறு துயரங்களுக்கிடையே பயணித்த இம்மக்கள் நிரந்த வீடுகளில் குடியமர்த்தப்பட்டதால் மறுகுடியமர்த்தல் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாகவே அரசு நம்புகிறது. ஆனால் எதார்த்த நிலை இதற்கு மாறாக உள்ளது. எர்ணாவூர் சுனாமி நகர் என அழைக்கப்படும் இங்கு தற்போது பல்வேறு திட்டங்களின் கீழ் குடிசை மாற்று வாரியம் மூலம் சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் சுனாமியால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட பெரும்பாலான பயனாளிகள் சட்டவிதிகளுக்கு முரணாக வீடுகளை விற்றுவிட்டனர். மேலும் பலர் வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளனர். சென்னைக்கு ஆயிரம் ரூபாய் மாத வாடகையில் வீடு கிடைக்கும் வாய்ப்பு சுனாமி நகரில்தான் உள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள், தனிநபர்கள், வட மாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கணிசமாகக் குடியேறிவிட்டனர். பெயரளவிற்கே சுனாமி பாதிக்கப்பட்டோருக்கான குடியிருப்பாக இருந்து வருவதை காணமுடிகிறது.
12 ஆண்டுகளில் சுனாமி மறுவாழ்வு மறு குடியமர்த்தல் திட்டம் குறித்து முழுமையாக ஆய்வு செய்தால் இத்திட்டத்தின் இலக்கு வெகுதூரம் விலகிச் சென்றிருப்பதை அறிய முடியும் என்பதே உண்மை நிலை. அரசு நடவடிக்கை எடுக்குமா?

வீடுகளை விற்க காரணங்கள் என்ன?

ஆழிப்பேரலையில் சிக்கிய வீடுகள் இருந்ததற்கான சுவடுகள் கூட சில இடங்களில் இல்லை. இதனைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்தில் இருந்தவர்கள் போலியாக நூற்றுக்கணக்கானோரை பயனாளிகள் பட்டியலில் சேர்த்துவிட்டதே இத்திட்டம் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் ஆகும். பல வீடுகளை முறைகேடாக ஒதுக்கீடு பெற்றவர்கள் நிரந்தர வீடுகளைப் பெறும்வரை தங்களுக்கு வேண்டியவர்களைக் குடியமர்த்தி வந்தனர். நிரந்தர வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் அவர்களை வெளியேற்றிவிட்டு குறைந்த விலைக்கு விற்றுவிட்டனர். இந்த விற்பனை சட்டப்படி செல்லாது என்றாலும் கூட யாரும் தடுக்காததாலும், சந்தை விலையைவிட பலமடங்கு குறைந்த விலைக்கு கிடைப்பதாலும் வாங்குவோர் இதனைப் பயன்படுத்திக் கொண்டனர்.
மேலும் வசிப்பிட கலாசாரம், பழக்கவழக்கங்களை கைவிட முடியாதவர்கள் பழைய பகுதிக்கே சென்றுவிட்டனர். குறைந்த வாடகைக்கு வீடுகள் கிடைப்பதால் நடுத்தர குடும்பங்கள் யாரும் வராவிட்டாலும் ஏழைகள், தனிநபர்கள், வெளியூர் கூலித் தொழிலாளர்களால் வீடுகளுக்கான தேவை அதிகரித்தது. இதனால் இந்த வீடுகளுக்கு கிராக்கி இருப்பதால் இவ்வீடுகள் படிப்படியாக விற்கப்படுவது தொடர்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com