பணப் பலன்களுக்காக காத்திருக்கும் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள்

ஓய்வு பெற்றவுடன் கிடைக்க வேண்டிய பணப்பலன்களுக்காக 6 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள்.
பணப் பலன்களுக்காக காத்திருக்கும் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள்

ஓய்வு பெற்றவுடன் கிடைக்க வேண்டிய பணப்பலன்களுக்காக 6 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள்.
இந்த பிரச்னை 2011 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. அரசுத் துறை ஊழியர்களுக்கு இணையாகப் போக்குவரத்துக் கழகத்தில் ஊதியமோ, ஓய்வூதியமோ கிடையாது. எனவே, ஓய்வு காலப் பணப்பலன்களை மலைபோல நம்பும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு இப்போது அதுவும் ஏறத்தாழ 6 ஆண்டுகளாகக் கிடைக்கவில்லை.
ஓய்வு பெற்றவுடன் வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களில் வருங்கால வைப்பு நிதிக்கான காசோலை மட்டுமே ஓராண்டு பின் தேதியிட்டு வழங்கப்படுகிறது. ஆனால், பணிக்கொடை, விடுப்புத் தொகை, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்டவற்றுக்குப் பல ஆண்டுகள் கடந்து காத்திருக்கும் நிலை உள்ளது. இதுபோல, தமிழகம் முழுவதும் உள்ள 21 போக்குவரத்துக் கழகங்களில் ஏறத்தாழ 70,000 ஓய்வூதியர்கள் உள்ளனர். கும்பகோணம் மண்டலத்தில் மட்டும் 10,500-க்கும் அதிகமானோர் காத்திருக்கின்றனர்.
ஒவ்வொருவருக்கும் குறைந்தது ரூ. 5 லட்சம் முதல் அதிகபட்சமாக 9 லட்சம் வரை ஓய்வுகாலப் பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டும். போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் நிதிப் பற்றாக்குறையே கால தாமதத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏஐடியுசி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சங்க ஆலோசகர் துரை. மதிவாணன் தெரிவித்தது:
இதுதொடர்பாக நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று வந்தவர்களுக்கும் மாதாமாதம் குறிப்பிட்ட தேதிகளில் வழங்கப்பட வேண்டிய தவணை தொகைகளும், வழங்கப்படாமல் நீதிமன்ற உத்தரவுகள் புறக்கணிக்கப்படுகின்றன. ஓய்வுகாலப் பணப்பலன்கள் கிடைக்காததால், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் குடும்பத்தைக் காப்பாற்ற இயலாமல் தவிக்கின்றனர். வயோதிகம் காரணமாக நோய்வாய்ப்பட்ட ஓய்வூதியர்கள் மருத்துவச் செலவுக்கும் அவதிப்பட்டு வருகின்றனர். பிள்ளைகளின் படிப்புச் செலவு, சுப நிகழ்ச்சிகளையும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர் என்றார் மதிவாணன்.
இப்பிரச்னை நிலவும் நிலையில், இப்போது ஓய்வூதியம் வழங்குவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. மாதந்தோறும் 2 அல்லது 3-ஆம் தேதி ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், டிசம்பர் மாதம் முதல் காலதாமதம் செய்யப்படுவதுடன் இரு தவணைகளாக வழங்கப்படுகிறது.
ஏற்கெனவே, ஓய்வூதியப் பணப்பலன்கள் கிடைக்காததால், மிகுந்த சிரமங்களுக்கு இடையே வாழ்ந்து வரும் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களிடையே இப்போது ஓய்வூதியமும் தொடருமா என்ற சந்தேகமும், வேதனையும் எழுந்துள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக ஓய்வூதிய நம்பகம் (பென்சன் டிரஸ்ட்) 1998 செப். 1-ம் தேதி தொடங்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு நிர்வாகம் செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதிப் பங்கை இந்த அமைப்புக்கு அனுப்பி, அதன் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தால் 2003 ஆம் ஆண்டு ஏப். 1-ம் தேதிக்கு பிறகு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியில் சேர்ந்த தொழிலாளர்களை இந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க முடியவில்லை. இதனால், நம்பக அமைப்புக்கு வரக்கூடிய வருவாய் குறைந்துவிட்டதே இப்பிரச்னைக்கு காரணம் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
எனவே, போக்குவரத்துக் கழக ஓய்வூதியத் திட்டத்தை அரசே பொறுப்பேற்று கருவூலம் மூலம் நடத்தினால் மட்டுமே இப்பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்கின்றனர் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com