பாமாயில், பருப்பு வழங்குவதை நியாய விலைக் கடைகளில் நிறுத்தக் கூடாது: ராமதாஸ்

நியாய விலைக் கடைகளில் பாமாயில், பருப்பு வழங்குவதை நிறுத்தக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமாயில், பருப்பு வழங்குவதை நியாய விலைக் கடைகளில் நிறுத்தக் கூடாது: ராமதாஸ்

நியாய விலைக் கடைகளில் பாமாயில், பருப்பு வழங்குவதை நிறுத்தக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:-
நியாய விலைக் கடைகளில் பருப்பு வகைகளும், பாமாயிலும் வழங்குவது நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
வெளிச்சந்தையில் உணவுப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் சிறப்பு பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியன கிலோ ரூ.30, பாமாயில் ரூ.25 என்ற விலையில் விற்பனையாகிறது. இது ஏழை, நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
ஜனவரி வரை 40 விழுக்காடு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்தப் பொருள்கள் பிப்ரவரியில் ஒருவருக்குக் கூட வழங்கப்படவில்லை. அதேபோல, மாதம் 20 கிலோ இலவச அரிசி வழங்குவதற்கு பதிலாக 10 கிலோ மட்டுமே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் தாற்காலிக ஏற்பாடாகவே தொடங்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் அரசாணை மூலம் இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்தத் திட்டம் கடந்த டிசம்பர் முதல் நீட்டிக்கப்படாததால், பருப்பு வகைகளும், பாமாயிலும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டால், வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கட்டுக்கடங்காமல் உயரும் ஆபத்தும் உள்ளது.
எனவே, இந்தத் திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும். பருப்பு வகைகளும், பாமாயிலும் மார்ச் 1-ஆம் தேதி முதல் தடையின்றி வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com