மனநல பிரச்னைகளுக்கு மாந்திரீகர்களை அணுகாமல் மருத்துவரையே அணுகுங்கள்: எஸ். முகம்மது கவுஸ்

மனரீதியான பிரச்னை இருந்தால், மாந்திரீகர்களை அணுகாமல், அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் மன நல மருத்துவரையே

திருவள்ளூர்: மனரீதியான பிரச்னை இருந்தால், மாந்திரீகர்களை அணுகாமல், அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் மன நல மருத்துவரையே அணுகுவதே சிறந்தது.
 இன்றைய காலத்தில் ஓய்வில்லாமல் உழைப்பது, குடும்பப் பிரச்னை, பண நெருக்கடி, காதல் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலானோர் மனநிலை பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
 இதனால் அவர்கள் இயல்புநிலை தவறி நடந்துகொள்வர். இதுபோன்ற குழப்பங்களில் சிக்குபவர்கள் இப்பிரச்னையில் இருந்து விடுபட காத்து, கருப்பு, பில்லி, சூனியம், ஏவல் என மக்கள் ஏதாவது ஒரு பெயரை வைத்து மாந்திரீகர்களிடம் சென்று பனத்தை இழக்கின்றனர். மேலும், உரிய தீர்வும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
 மேலும் கவனப்பற்றாக்குறை உள்ள சிறுவர்கள், அதீத சுறுசுறுப்பு உள்ள சிறுவர்களை பெற்றோர்கள் முறையாக கவனித்து, தகுந்த சிகிச்சை அளிக்காமல் மாந்திரீகர்களிடம் அழைத்துச் செல்கின்றனர். இது என்றுமே நிரந்தர தீர்வாகாது.
 இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மன நல மருத்துவர் எஸ்.எம் பதூர் மொய்தீன் தினமணி நிருபருக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
 நாட்டில் தற்கொலைகளை தடுக்கும் நோக்கிலும், மனரீதியான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலும் ஒவ்வொரு அரசு தலைமை மருத்துவமனை, வட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு மன நல ஆலோசகரை நியமித்துள்ளது.
 மாவட்டத்தில் தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றுபவர்களின் நண்பர்கள், உறவினர்கள் முன்கூட்டியே அறிந்தால், அந்த நபரை இதுபோன்ற மையங்களுக்கு அழைத்து வரலாம்.
 அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி, இந்த எண்ணத்தில் இருந்து மீட்டு விடுகிறோம். அதே போல் சிலர் தங்களுக்கு அடிக்கடி தற்கொலை எண்ணம் தோன்றுவதாக வந்தால், அவர்களையும் அந்த நினைப்பில் இருந்து மீட்டு நல்ல நிலையில் வாழ வைக்கிறோம்.
 பொதுவாக மனநல பிரச்னை என்றாலே வெறும் ஆலோசனை மட்டுமே வழங்கப்படும் என்ற தவறான கருத்து மக்களிடையே உள்ளது. ஆனால் ஆலோசனையுடன் சிறந்த மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. மாத்திரைகள், ஆலோசனைகள் மூலமாகவே பிரச்னைகள் தீர்க்கப்படும்.
 சிறுவர்களுக்கான பிரச்னை: மற்றவர்கள் தங்களிடம் பேசும்போது கேட்காதது போல் இருத்தல், விவரங்களை கூர்ந்து கவனிக்க இயலாமை, கவனமின்றி தவறுகள் செய்தல், முக்கியமான பொருள்களை தொலைத்தல், அடிக்கடி கோபப்படுதல், அடக்க முடியாத அளவில் அடம்பிடித்தல், எப்போதும் எதன் மீதாவது ஏறிக் குதித்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்கள் சிறுவர்களிடம் காணப்படும்.
 இந்த செயல்களுக்கு மருத்துவ ரீதியாக கவனக்குறைபாடு, அதீத சுறுசுறுப்பு என இருவகை பாதிப்பே காரணம். இதுபோன்ற பாதிப்புகளுக்குரிய சிறுவர்களை பெற்றோர்கள் உரிய மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லாமல் மாந்திரீகர்களிடம் அழைத்துச் செல்கின்றனர்.
 அங்கு அவர்களுக்கு தாயத்து வாங்கிக் கட்டுகின்றனர். இதுபோன்ற செயல்களை தவிர்த்து, மருத்துவரை அணுகினால் நல்ல பலன் கிடைக்கும். பாதிப்புக்குரிய சிறுவர்களை ஸ்கேன் செய்து, அவர்களின் நரம்பு மண்டலங்களுக்கு ஏற்ற வகையில் மாத்திரை, மருந்துகளை வழங்கி தேவையான நரம்புகளை தூண்டிவிட்டால் அந்த சிறுவர்கள் இயல்பான நிலைக்கு வந்துவிடுவார்கள்.
 எனவே, பெற்றோர்கள், பொதுமக்கள் மன ரீதியான பிரச்னைகளுக்கு பில்லி, சூனியம், ஏவல் என நினைத்து பணத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல், அரசு மன நல மருத்துவமனையில் உள்ள மன நல ஆலோசகரை அணுகலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com