ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம்: ஜி. ராமகிருஷ்ணன்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும், மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தக் கோரியும், புதுக்கோட்டை மாவட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம்: ஜி. ராமகிருஷ்ணன்

நாமக்கல்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும், மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தக் கோரியும், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய 3 கட்சிகள் சார்பில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.28) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாமக்கல்லில் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
வறட்சி, பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.  இந்தச் சூழலில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது கடுமையான பாதிப்பை உருவாக்கும். மத்திய அரசு இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும்.
அதை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய 3 கட்சிகள் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செவ்வாய்க்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. மத்திய அரசு இந்தத் திட்டத்தை கைவிடவில்லை எனில், புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி மாநில முழுவதும் இத்தகைய போராட்டம் நடத்தப்படும்.
வறட்சி நிவாரணமாக ரூ. 32 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம், மாநில அரசு கேட்டுள்ளது. ஆனால், வறட்சி நிவாரண நிதியாக ரூ.2,000 கோடி அறிவிக்கப்பட்டிருப்பது யானைப் பசிக்கு சோளப்பொறி போட்டதுபோல் உள்ளது. அதிமுகவில் நடப்பது அதிகாரத்துக்கான போட்டி, மக்கள் பிரச்னை தீர்ப்பதற்கான போட்டியில்லை.
பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு நாமக்கல் மாவட்டத்தில் தறித் தொழிலாளிகளுக்கு கூலி குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ. 2,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com