ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி புதுகையில் கூட்டு இயக்கத்தினர் உண்ணாவிரதம்

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பகுதியினர்.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பகுதியினர்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, உரிமை மீட்புக் குழு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பில் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள்: கடந்த 1997-ல் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசால் சிலரது நிலங்கள் குத்தகைக்கு கையகப்படுத்தப்பட்டு, 2007ஆம் ஆண்டில் அப்பகுதியில் 35 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. அப்போது, பொதுமக்களிடம் மண்ணெண்ணை எடுக்கப் போவதாகத் தவறான தகவலை தெரிவித்ததோடு, அப்பகுதி மக்களின் விவசாயத்துக்கு தாராளமாக தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில், விவரம் அறியாத விவசாயிகளும் பொதுமக்களும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், ஏற்கெனவே 4 ஆயிரம் அடி ஆழத்தில் போடப்பட்ட 2 ஆழ்குழாய் கிணறுகளில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு கிடைப்பது தெரிய வந்ததால், அவ்விரண்டு ஆழ்குழாய் கிணறுகளும் சீல் வைக்கப்பட்டன. மீத்தேன் திட்டம் கைவிடப்பட்ட பிறகு, ஹைட்ரோ கார்பன் எனும் பெயரில் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு கடந்த15 ஆம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து, ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் ஆய்வு மேற்கொண்டது. அப்போதுதான் உண்மை விவரம் தெரிய வந்து, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மக்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதையடுத்து, மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும். தமிழக அரசு சட்டப்பேரவை அவசரக் கூட்டத்தை உடனே கூட்டி நெடுவாசல் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், மாவட்ட நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்தப் போராட்டத்துக்கு அனுமதி வேண்டி புதுகை நகரக் காவல் நிலையம் சென்ற மீட்புக் குழு நண்பர்கள் சீ.அ. மணிகண்டன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும். இந்திய வளக் கொள்ளைக்கு முடிவு கட்ட மத்திய அரசின் பட்டியலில் இருக்கும் கனிம வளங்களை மாநில அரசுப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை திலகர்திடலில் நடைபெற்ற போராட்டத்தில் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் க.சி. விடுதலைக்குமரன், பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் த. செங்கோடன், எஸ். கவிவர்மன், அபுபக்கர் சித்திக், அருண்மொழிச்சோழன், அண்ணாதுரை, அமைப்புகளின் நிர்வாகிகள் பாண்டியன், லெனின், முகிலன், குணசேகரன், வசீகரன், பிரபாகரன், மிசாமாரிமுத்து, கிறிஸ்டினா, கோவன், திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் சாத்தையா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

புதுகையில் உரிமை மீட்புக் குழு, ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 1-இல் கடையடைப்பு

புதுகையில், மாவட்ட வர்த்தகர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் சீனு சின்னப்பா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவசர செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கினால், குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும். விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். சுமார் 21 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உப்புநிலங்களாக மாறக்கூடும். நெடுவாசலைச் சுற்றி 100 கி.மீ. சுற்றளவில் சுற்றுச்சூழல் பாதிக்கும். இந்த கிராமங்களைச் சோóந்த சுமார் 5 லட்சம் மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்.
எனவே, இத்தகைய ஆபத்துக்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மாநில அரசு இதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் மார்ச் 1ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் முழுகடை அடைப்பு நடத்துவதென மாவட்ட வர்த்தகர் கழகம் தீர்மானித்துள்ளது. இதில், வர்த்தகர் கழகச் செயலர் சவரிமுத்து, கூடுதல் செயலர் ஆர். சம்பத் குமார், பொருளாளர் சாகுல் அமீது, சண்முக பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com