ரயில்வேக்கு சொந்தமாக 111 ஏக்கர் நிலம் முனையமாக்க தாமதம் ஏன் ?

சென்னை தண்டையார்பேட்டையை ரயில்வே முனையமாக்குவதற்கு 111 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது
ரயில்வேக்கு சொந்தமாக 111 ஏக்கர் நிலம் முனையமாக்க தாமதம் ஏன் ?

சென்னை தண்டையார்பேட்டையை ரயில்வே முனையமாக்குவதற்கு 111 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. எனினும், இந்த ரயில் நிலையத்தை முனையமாக்குவதற்கான பணிகளை ஏன் ரயில்வே ஆர்வம் காட்டவில்லை என தென் மாவட்ட பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தமிழகத்தை நம்பி வேலைவாய்ப்புக்காக கேரளம், ஆந்திரம், ஒடிஸா, ராஜஸ்தான், பிகார் போன்ற வெளி மாநிலத்திலிருந்து அதிகளவிலான மக்கள் சென்னைக்கு வருகின்றனர்.
இதன் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு அதிக ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையம், இடப்பற்றாக்குறையால் நிரம்பி வழிகிறது.
ஏற்கெனவே 12 ஆண்டுகளாக தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையமான சென்னை ராயபுரத்தில் முனையம் அமைப்பதற்காக மக்கள் போராடி வந்தனர். பின்னர் அடிக்கல்லும் நாட்டப்பட்டது. சில வேலைகளும் நடந்தன. ஆனால் இடப்பற்றாக்குறையை காரணம் காட்டி ராயபுரத்தில் முனையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
செங்கல்பட்டில் இருந்து...: சென்ட்ரல் ரயில் நிலைத்திலிருந்து இயக்கிய மும்பை - காக்கிநாடா போன்ற ரயில்கள் எழும்பூரில் இருந்தும் செங்கல்பட்டிலிருந்தும் இயக்கப்படுகின்றன. இதனால் தென்தமிழக மக்கள் சென்னை வர பயன்படும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து அதிக ரயில்களை தென் தமிழகத்துக்கு இயக்க சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் தென் தமிழகத்துக்கான புதிய ரயில் அறிவிப்புகள் இல்லாமல் போய்விடுகின்றன.
வட சென்னை மக்களுக்கு...: தாம்பரகத்தில் புதிய ரயில் முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து தாம்பரம் 26 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வட சென்னை மக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல தாம்பரம் வரை போக விரும்பவில்லை. எனவே தாம்பரம் முனையத்தில் இருந்து தென் தமிழகத்துக்கு ரயில்களை இயக்க மக்கள் விரும்பவில்லை. வட சென்னை பகுதியில் ஒரு முனையம் அமைக்கப்பட வேண்டும் என்பதே வட சென்னைவாசிகளின் விருப்பமாகும்.
111 ஏக்கர் நிலம்: இந்த நிலையில், தண்டையார்பேட்டையில் ரயில்வேக்கு சொந்தமாக 111 ஏக்கர் நிலம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த இடத்தைப் பயன்படுத்தி தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தை முனையமாக ரயில்வே மாற்றலாம். மேலும் தண்டையார்பேட்டையில் கார் நிறுத்தம், ஹோட்டல்கள் மற்றும் தேவையான சாலை அமைக்கவும் அங்கிருந்து தென் தமிழகத்திற்கும், கேரளம், வடமாநிலங்களுக்கும் ரயில்களை இயக்க முடியும்.
இது குறித்து தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெ.சூசைராஜ் கூறியது: தண்டையார்பேட்டையில் ரயில் முனையம் அமைப்பதற்கும், பல்வேறு ரயில் திட்டங்களுக்கு நிறைவேற்றவும் தமிழக அரசு ரயில்வே துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ’விஷன் 2023'-இல் பல்வேறு ரயில்வே திட்டங்கள் அடங்கிய கோரிக்கையை பிரதமருக்கு அனுப்பியிருந்தார். அதில் முதலாவது சென்னை - கன்னியாகுமரி இடையே அதிவேக ரயில்களை இயக்க இருவழி ரயில் பாதை அமைக்கக் கோரி இரண்டு முறை ஜூன் 3, 2014 மற்றும் பிப்ரவரி 6, 2015 இல் கடிதம் அனுப்பி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்.
இதன் விளைவாக அந்தக் கோரிக்கை மத்திய அரசு ஏற்று மதுரை - நாகர்கோவில், மணியாச்சி - தூத்துக்குடி, நாகர்கோவில் - திருவனந்தபுரம் போன்ற முக்கிய திட்ட அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் தேவையான நிதியை ஒதுக்கவில்லை.
தென்தமிழகத்தில் வறட்சி காரணமாக வேலை வாய்ப்பை இழந்த விவசாயிகள், வியாபாரிகள், மாணவ மாணவியர் அனைவரும் அதிகளவில் சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ரயில்வே நிர்வாகம் தென் மாவட்டங்களுக்கு தேவையான ரயில்களை இயக்க முன்வராத காரணத்தால், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தென் மாவட்டகளிலிருந்து சென்னைக்கு இயக்கப்படுகின்றன.
இதனால் விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. பேருந்துகளால் செங்கல்பட்டு, பெருங்களத்தூர், தாம்பரம் மற்றும் சென்னை நகருக்குள் மிகுந்த வாகன நெரிசலும் உருவாகிறது. ஆகவே, மதுரை - நாகர்கோவில் இருவழி ரயில் பாதை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசுக்கும் ரயில்வே நிர்வாகத்திற்கும் முதல்வர் அழுத்தம் கொடுத்து தேவையான நிதியை ஒதுக்கி இருவழிப்பாதைகளை துரிதப்படுத்தவும்.
தென் தமிழகத்திற்கு தேவையான அதிவேக ரயில்களை இயக்க முயற்சி எடுக்கவேண்டும்.
மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.நகரில் இருக்கும் தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தை முனையமாக்குவதற்கான முயற்சிகளை தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும். அதற்கான கடிதத்தை அனுப்பியுள்ளோம் என்றார் சூசைராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com