வறட்சி: சாயக் கழிவு நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தும் அவலம்

திருப்பூர் மாவட்டம், காங்கயம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, தென்னை உள்ளிட்ட பயிர்களைக் காப்பாற்ற நொய்யல் ஆற்றில் இருந்து சாயக் கழிவு நீரைப் பயன்படுத்தும் அவல நிலைக்கு
காங்கயத்தை அடுத்த மருதுறை நொய்யல் ஆற்றில் இருந்து சாயக் கழிவு நீரை விவசாயத்துக்காக டிராக்டர் மூலம் கொண்டும் செல்லும் விவசாயிகள்.
காங்கயத்தை அடுத்த மருதுறை நொய்யல் ஆற்றில் இருந்து சாயக் கழிவு நீரை விவசாயத்துக்காக டிராக்டர் மூலம் கொண்டும் செல்லும் விவசாயிகள்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, தென்னை உள்ளிட்ட பயிர்களைக் காப்பாற்ற நொய்யல் ஆற்றில் இருந்து சாயக் கழிவு நீரைப் பயன்படுத்தும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், காங்கயம் பகுதியில் உள்ள ஒரத்துப்பாளையம் அணையில் நொய்யல் நீர் தேக்கி வைக்கப்படுகிறது. அங்கிருந்து, சின்னமுத்தூர் தடுப்பணைக்குத் தண்ணீர் திறக்கப்படும்.
சின்னமுத்தூர் தடுப்பணையிலிருந்து பிரியும் வாய்க்கால்கள் மூலம், மேலும் 5 கி.மீ. தொலைவில் உள்ள கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, கரூர் மாவட்டம், பஞ்சாமாதேவி உள்ளிட்ட பகுதிகளுக்குப் பாசன வசதி அளிக்கப்பட்டு வந்தது.
ஒரத்துப்பாளையத்தில் சாயக் கழிவு நீர் தேங்குவதற்கு முன் இப்பகுதிகளில் தென்னை, கரும்பு, மஞ்சள் சாகுபடி நன்றாக நடைபெற்றது. பின்னர், அவை அழிந்துவிட்டன.
ஆனால், தென்னை மரங்களுக்கு மட்டும் கிணறு, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பாசன வசதி அளிக்கப்படுகிறது.
நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள பவானிசாகர் வாய்க்கால் நீர்தான் இங்கு நிலத்தடி நீரில் உள்ள உப்புத் தன்மை அளவை ஓரளவுக்கு குறைத்துள்ளது.
ஆண்டுக்கு 6 மாதம் வரை பவானிசாகரில் வரும் நீரைக் கொண்டே இங்குள்ள பெரும்பாலான விவசாயிகள் சாகுபடியில் ஈடுபடுகின்றனர். ஆனால், பவானிசாகர் அணையிலும் நீர் இல்லாததால் இப்பகுதியில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் தென்னை மரங்களைக் காப்பாற்ற நொய்யல் ஆற்றில் உள்ள சாயக் கழிவு நீரைப் பயன்படுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
நொய்யல் ஆற்றில் சாயக் கழிவு நீர் கலந்ததால் மாசடைந்த நிலையில் உள்ளது. இந்த நீரில் உப்புத்தன்மை அதிகமாக இருக்கும். இதனால், இந்த நீரைக் குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்துவதில்லை.
ஆனால், காய்ந்து வரும் தென்னை மரங்களைக் காப்பாற்ற இந்த சாயக் கழிவு நீரைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
இதனால், மழைக் காலம் வரையிலும் தென்னை மரங்களை உயிர்ப்போடு வைத்திருக்க முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com