ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம்: நெடுவாசல் சுற்றியுள்ள 100 கிராமத்தினர் ஆதரவு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக அப்பகுதியில் திங்கள்கிழமை 4 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
நெடுவாசலில் நடைபெற்ற போராட்டம், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோர்.
நெடுவாசலில் நடைபெற்ற போராட்டம், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக அப்பகுதியில் திங்கள்கிழமை 4 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. மேலும், அங்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, 100 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், அந்தத் திட்டத்தை எதிர்த்து கடந்த 10 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்பினர் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில், நெடுவாசல் போராட்டக்களத்தில் திரண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, நெடுவாசல் பேருந்து நிறுத்தம், நாடியம்மன் கோயில், திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதி, கோட்டைக்காடு ஆகிய 4 இடங்களில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. இதில், திட்டத்தை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், நாடியம்மன் கோயிலில் அப்பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில், நெடுவாசல், வடகாடு, புள்ளான்விடுதி, அணவயல் மாங்காடு, கீரமங்கலம், செரியலூர் உள்ளிட்ட ஆலங்குடி, கறம்பக்குடி, பேராவூரணி வட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 3 வட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை நெடுவாசலில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது, அனைத்து கிராம மக்களும் ஒன்றுசேர்ந்து நெடுவாசலில் இருந்து புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் வரை மனிதச்சங்கிலி நடத்துவதன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பை தெரிவிப்பது, திட்டத்துக்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுப்பது, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இயற்கை எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தக் கேட்டுக் கொள்வது.
அரசு சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அரசு அடையாள அட்டைகளையும் திருப்பி அனுப்புவது, நெடுவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள 100 கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் அகல் விளக்கு ஏற்றி போராட்டத்தில் ஈடுபடுவது. அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிப்பது.
அனைத்து ஊராட்சிகளிலும் ஒரே நேரத்தில் கிராம சபையைக் கூட்டி இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது, அனைத்து ஊராட்சிகளும் ஒன்றிணைந்து ஒவ்வொரு ஊராட்சியின் சார்பில் தினந்தோறும் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நெடுவாசலில் நடைபெற்ற போராட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ. மெய்யநாதன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் புஸ்பராஜ், ராஜசேகரன், சாமிநாதன், மக்களவை முன்னாள் உறுப்பினர் ராஜாபரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டக்களத்தில் பங்கேற்றோருக்கு உணவு: பல்வேறு ஊர்களில் இருந்து நெடுவாசல் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கானோருக்கு போராட்டக் களத்தின் அருகே கிராமத்தின் சார்பிலும், தன்னார்வ தொண்டர்கள் சார்பிலும் அங்கேயே உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.
போலீஸ் குவிப்பு, வாகனச் சோதனை: போராட்டம் நடைபெற்று வரும் நெடுவாசலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதிகளில் தடுப்புகளை ஏற்படுத்தி வாகனைச் சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்திற்கு வெளியூரில் இருந்து வரும் இளைஞர்களை போலீஸார் தடுத்து மிரட்டி வெளியேற்றி வருவதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com