இன்னும் கொஞ்சம் பாடமாட்டார்களா?!- ஏங்க வைத்த ரஞ்சனி காயத்திரி சகோதரிகள்!

ஒருவர் மற்றவரை சபாஷ் சொல்லி பாராட்டிக் கொள்ளும்போது, என்ன இவர்கள் தங்களுக்குள்ளேயே பாராட்டிக் கொள்கிறார்களே என்று சிலர் கருதக் கூடும். ஆனால், அவர்கள் சபாஷ் போடும் இடங்களில் ரசிகர்களும் சபாஷ் போடு...
இன்னும் கொஞ்சம் பாடமாட்டார்களா?!- ஏங்க வைத்த ரஞ்சனி காயத்திரி சகோதரிகள்!

நாரத கான சபாவில் கடந்த 23-ஆம் தேதி 4 மணிக்கு ரஞ்சனி - காயத்ரியின் நிகழ்ச்சி. எம். ராஜீவ் வயலின், கே.வி. பிரசாத் மிருதங்கம், சந்திரசேகர சர்மா கடம். அரங்கம் நிரம்பி வழிந்தது என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. வயலினுடன் இசை விழா மேடைகளில் அறிமுகமாகி இப்போது முன்னணிப் பாடகர்களாக வலம் வருகிறார்கள் இந்த இரட்டையர்கள். ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் இவர்களுக்கு அப்பியாசம் இருப்பதால் ரஞ்சனி - காயத்ரியின் சங்கீதத்திற்கு ஒரு தனித்துவம் ஏற்பட்டிருக்கிறது.

வசந்தா ராக வர்ணத்துடன் நிகழ்ச்சி தொடங்கி, அம்புஜம் கிருஷ்ணா மோஹனம் ராகத்தில் அமைத்திருக்கும் "மோஹனமாய்த் திகழுமே' என்கிற சாகித்யம் அடுத்து வந்தது. தொடர்ந்தது தோடி ராக ஆலாபனை. ஆலாபனை என்று சொன்னால் வெள்ளப் பெருக்கின்போது குற்றாலம் அருவி போன்ற ஆலாபனை! இருவரும் மாறி மாறி தோடி ராகத்தின் அத்தனை பரிமாணங்களையும் பரிமாறினார்கள். தியாகராஜ ஸ்வாமிகளின் நினுவினா சுகமுதான் சாகித்யம். அதில் "ராக ரஸிக ரஹித' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு கல்பனாஸ்வரமும் பாடினார்கள்.

மாதவ மனோகரி ராகத்தில் தீட்சிதர் இயற்றிய மஹாலக்ஷ்மி கருணாரஸ என்கிற க்ருதியை பாடிவிட்டு விஸ்தாரமான கேதார கெளளை ராக ஆலாபனையில் இறங்கினார்கள் இரட்டையர்கள். இவர்களது ராக ஆலாபனையில் சிறப்பம்சம் மின்னல் கீற்று போல அவ்வப்போது திடீரென்று ஒருவர் மாற்றி ஒருவர் வெளிப்படுத்தும் சங்கதிகள். பூச்சி ஸ்ரீநிவாச அய்யங்காரின் சரகுணபாலிம்ப என்கிற சாகித்யத்தில் பல்லவியிலேயே நிரவல் அமைத்துக்கொண்டு ஸ்வரமும் பாடி தனியாவர்த்தனத்துக்கும் நேரம் ஒதுக்கினார்கள்.

சரசரவென்று மருகேலரா (ஜெயந்தஸ்ரீ) பாடியபோது அடுத்தாற்போல இன்னொரு விஸ்தாரமான ஆலாபனை காத்திருக்கிறது என்பது புரிந்தது. எதிர்பார்த்தது போலவே ஹம்ஸநாதம் ராக ஆலாபனையில் இறங்கினார்கள் இரட்டையர்கள்.

சதுஸ்ர ஜாதி த்ரிபுட தாளத்தில் அமைந்த "வா வெண்ணிலாவே மண்ணில் வா தேய்ந்திடாமல் தீபமாக ஒளிர' என்கிற பல்லவி. "வா வெண்ணிலாவே மண்ணில் வா' என்கிற பூர்வாங்கத்தை சதுஸ்ர நடையிலும், "தேய்ந்திடாமல் தீபமாக ஒளிர' என்கிற உத்தராங்கத்தை திஸ்ர நடையிலும் அமைத்துக் கொண்டு பாடியது வித்தியாசமாக இருந்தது. இப்படி ஏதாவது புதுமையை இவர்களது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பார்க்க முடிகிறது. அதுதான் ரஞ்சனி - காயத்ரியின் கச்சேரிகள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதன் காரணம்.
வெண்ணிலா மையமாக உள்ள பல்லவி என்பதால் அன்றைக்கு ராகமாலிகை ராகங்களாக ரவிசந்திரிகா, சந்திரஜோதி, சூர்யா ஆகிய ராகங்களை மிகவும் சாதுர்யமாக தேர்ந்தெடுத்து பாடியதற்காகவே ரஞ்சனி - காயத்ரியை பாராட்ட வேண்டும்.

சோதனை சுமைக்கு என்கிற பாபநாசம் சிவனின் காபி ராக பாடலுடன் கச்சேரியை அவர்கள் முடித்துக் கொண்டபோது இன்னும் கொஞ்சம் பாட மாட்டார்களா என்றுதான் இருந்தது.

ரஞ்சனி - காயத்ரியிடம் ஒரு சிறப்பு. அவர்கள் ஒவ்வொரு கச்சேரியிலும் ரசனையுடன் உணர்வுபூர்வமாகப் பாடுவதுதான். ஒருவர் மற்றவரை சபாஷ் சொல்லி பாராட்டிக் கொள்ளும்போது, என்ன இவர்கள் தங்களுக்குள்ளேயே பாராட்டிக் கொள்கிறார்களே என்று சிலர் கருதக் கூடும். ஆனால், அவர்கள் சபாஷ் போடும் இடங்களில் ரசிகர்களும் சபாஷ் போடுகிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

படங்கள்: ஆர்.கே, ஏ.எஸ். கணேஷ், அண்ணாமலை, வே.சக்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com