தவறான செய்திகளை தெரிவிக்க வேண்டாம்: ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

தவறான செய்திகள் வெளியிட்டு கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்க வேண்டாம் என்று மு.க. ஸ்டாலினை, அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கேட்டுக்கொண்டுள்ளார்.
தவறான செய்திகளை தெரிவிக்க வேண்டாம்: ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

சென்னை : தவறான செய்திகள் வெளியிட்டு கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்க வேண்டாம் என்று மு.க. ஸ்டாலினை, அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “கூட்டுறவு வங்கிகளில் 8.11.2016க்குப் பிறகு பழைய ரூபாய் நோட்டுகள் பெரிய அளவில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், கருப்புப்பணத்தை டெபாசிட் செய்வதற்காக கூட்டுறவு வங்கிகளை பயன்படுத்திக் கொண்டுள்ளது போலவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், அதில், “கூட்டுறவுத்துறை அமைச்சரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்களும் இதை ஏன் அனுமதித்தார்கள்’’ என்று ஒரு தேவையற்ற வினாவை எழுப்பி, இதுகுறித்து உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மு.க.ஸ்டாலின் கூறியதைப்போல் கூட்டுறவு வங்கிகளில் முறைகேடாக டெபாசிட் செய்ய முடியாது என்பதை முதலில் அவர் தெரிந்துகொள்ள வேண்டும். கூட்டுறவு வங்கிகள் அனைத்து நிலையிலும் கணினிமயமாக்கப்பட்டு, இவற்றின் செயல்பாடுகளுக்கென தனியாக மென்பொருள் தயாரிக்கப்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

எடுத்துக்காட்டாக, ஒரு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கமோ, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியோ, அல்லது தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியாக இருந்தாலும், நாள்தோறும் அவற்றின் அன்றாட நடவடிக்கைகளை கணினி மூலம் பதிவு செய்யப்பட்டு வங்கி பணிநேர முடிவில் இருப்பு விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இறுதி இருப்புத்தொகை விவரங்கள் நாணயவாரியாக கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு நாளும் கணக்குகள் முடிக்கப்பட்டு வருகிறது.

ஆக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் முதல், மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி வரை அனைத்துக் கூட்டுறவு அமைப்புகளும் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டு, வணிக வங்கிகளுக்கு இணையாக மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதால், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதைப்போல், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை விருப்பம் போல் டெபாசிட் செய்ய முடியாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்று சாதனை படைத்துள்ளன.

திமுக ஆட்சி காலத்தில்தான், எரிவாயு கடன் ஊழல், கொப்பரை கொள்முதல் ஊழல், மற்றும் தகுதியற்றவர்களுக்கு விவசாய கடன் வழங்குதல், போலி கடன்கள் வழங்குதல், வருவாய்க்கு மீறிய செலவினம், முறையற்ற பணி நியமனம், போன்ற நடவடிக்கைகளால் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அமைப்புகள், நசிந்து, சிதைந்தது. குறிப்பாக, கொப்பரை கொள்முதலில் ரூ.363.90 கோடியும், எரிவாயு கடன் வழங்கியதில் ரூ.84.34 கோடியும் என மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்று, கூட்டுறவு அமைப்புகள் சீரழிந்தது முன்னாள் திமுக ஆட்சியில்தான். அதுவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இருந்தபோது தான் என்பதை ஸ்டாலிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக ஆட்சி காலத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கூட்டுறவுச் சங்கங்கள் சிறப்பாக செயல்படுவதற்கான நடவடிக்கைகளை தீர்க்க தரிசனத்தோடு எடுத்து, வெளிப்படையான நிர்வாகம், உயர் தொழில்நுட்பம் போன்றவற்றை நடைமுறைப் படுத்தியதன் விளைவாக, தமிழக மக்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மீது, நம்பிக்கை வைத்து கூட்டுறவுச் சங்கங்களின் வைப்புத்தொகைகள் 30.9.2016 வரை ரூ.54,913.81 கோடி அளவிற்கு இட்டுவைத்துள்ளார்கள். எனவே, இதுபோன்ற தவறான செய்திகள் மூலமாக வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் ஒரு அச்சத்தை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் வைப்புத் தொகை ரூ.15,000 கோடி என கூறியுள்ளது சரியான புள்ளிவிவரம் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வருமானவரித்துறை ஆகியவை 11 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு மேற்கொண்டன. மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை ஆய்வு செய்த மத்திய புலனாய்வுத்துறை, தங்களது அறிக்கைகளில் எந்த தவறுகளும் நடைபெறவில்லை என சான்றளித்துள்ளார்கள்.

மேலும், சேலம் மத்திய கூட்டுறவு வங்கியைப் பொறுத்தவரை வருமானவரித்துறையும், அமலாக்கப்பிரிவும் ஆய்வு செய்து இதுவரை குறைகள் ஏதும் தெரிவிக்கவில்லை. கோயம்புத்தூர், கும்பகோணம், வேலூர், காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, கடலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளை ஆய்வு செய்த அமலாக்கத்துறையும், இதுவரை குறைகள் ஏதும் தெரிவிக்கவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com