முதல்வர் பொறுப்பை விட்டுக் கொடுப்பாரா ஓ. பன்னீர்செல்வம்?

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அன்றைய தினமே, ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
முதல்வர் பொறுப்பை விட்டுக் கொடுப்பாரா ஓ. பன்னீர்செல்வம்?


சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அன்றைய தினமே, ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

ஜெயலலிதா இறந்து ஒரு மாதம் ஆவதற்குள், அவரது மறைவால் காலியான அதிமுக பொதுச் செயலர் பதவியில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா அமர்ந்துள்ளார்.

இந்த நிலையில், சசிகலாவை முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு அதிமுகவைச் சேர்ந்த மக்களவை சபாநாயகர் தம்பிதுரை நேற்று வலியுறுத்தியிருந்தார்.

முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அப்பதவியில் இருந்து இறக்கிவிட்டு, சசிகலாவை அந்த இடத்தில் அமர வைக்க வேண்டும் என்பதுதான் அவரது தரப்பினரின் முதல் குறிக்கோளாக உள்ளது.

ஆனால், முதல்வர் பொறுப்பை விட்டுக் கொடுக்கும் எண்ணமே பன்னீர்செல்வத்துக்கு இல்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஆட்சிப் பொறுப்பை ஏற்றப் பிறகு போயஸ் தோட்ட இல்லத்துக்குச் செல்வதையே ஓ. பன்னீர்செல்வம் குறைத்துக் கொண்டார். மேலும், தலைமைச் செயலகத்துக்கு தினந்தோறும் வந்து முதல்வர் பணிகளை செவ்வனே கவனித்து வருகிறார். முழு நேரமும் முதல்வர் அறையில் வேலைகளை செய்து, அனைத்துக் கோப்புகளையும் விரைந்து கையெழுத்திட்டு அனுப்பி வருகிறார்.

இதனால், ஒரு பக்கம் முதல்வர் பதவிக்கான இருக்கையில் பன்னீர்செல்வம் நன்கு பொருந்திவிட்டார் என்று கூறப்பட்டாலும், அவரை அப்பதவியில் இருந்து இறங்கி, சசிகலாவுக்கு வழி விடுமாறு, சில அமைச்சரவை சகாக்கள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் பேசப்படுகிறது.

கட்சித் தலைமையும், ஆட்சித் தலைமையும் ஒன்றாக இருந்தால்தான், ஒருமித்து செயல்பட முடியும் என்று தம்பிதுரை நேற்று சசிகலாவை, ஆட்சி பொறுப்பேற்குமாறு வலியுறுத்தும்போது குறிப்பிட்டுச் சொன்னார்.

இதில், சசிகலாவை முதல்வராக பதவியேற்க வைக்க வேண்டும் என்பது அவரது எண்ணமா அல்லது, பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது அவரது திட்டமா என்பதுதான் யாருக்கும் விளங்காத கேள்வியாகவே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com