சசிகலா 2.0: ஜரூர் வேகத்தில் கட்சிப் பணிகள்; நிர்வாகிகள் உற்சாகம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியின் அதிமுக பொதுச் செயலர் என்ற புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட சசிகலா, புதிய பொறுப்பும், அதனால் கிடைத்த மரியாதை காரணமாகவும், உற்சாகத்தோடு கட்சி
சசிகலா 2.0: ஜரூர் வேகத்தில் கட்சிப் பணிகள்; நிர்வாகிகள் உற்சாகம்!


சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியின் அதிமுக பொதுச் செயலர் என்ற புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட சசிகலா, புதிய பொறுப்பும், அதனால் கிடைத்த மரியாதை காரணமாகவும், உற்சாகத்தோடு கட்சிப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

திமுக செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க. ஸ்டாலின், ஜல்லிக்கட்டுத் தொடர்பாகக் கூறிய கருத்துக்களுக்கு மறுப்புக் கூறி அதிமுக பொதுச் செயலர் சசிகலா நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு திமுக-காங்கிரஸ் கட்சிகளே காரணம் என்றும் இந்தப் பிரச்னையில் உண்மைகளை குழிதோண்டி புதைத்து விட்டு மக்களை மு.க.ஸ்டாலின் திசை திருப்புகிறார் என்றும் அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா குற்றம்சாட்டினார்.

அரசியல் ரீதியான முதல் அறிக்கை

அதிமுக பொதுச் செயலாளராகப் பதவியேற்றுள்ள வி.கே.சசிகலா, அரசியல் ரீதியாக திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தியது, பதவியேற்பு நிகழ்ச்சியில் பேச்சு, மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு என அவரது பெயரில் கட்சி சார்ந்த அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள், திமுக செய்யத் தவறிய விஷயங்கள் என அரசியல் ரீதியிலான தனது முதல் அறிக்கையை அவர் வெளியிட்டார்.

முன்னதாக, தலைமைச் செயகலத்தில் அதிமுக நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்தித்து பேசி வருகிறார் சசிகலா. அந்தச் சந்திப்பின் முதல் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது. கூட்டத்தில், அவர் பேசியது:- ஜெயலலிதா இல்லாத இந்த காலக்கட்டத்தில் கட்சியை ஒருங்கிணைத்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவரது மறைவை விமர்சனங்கள் செய்து அரசியலில் ஆதாயம் தேட சிலர் நினைக்கிறார்கள்.

அவர்களது சூழ்ச்சியை-சூட்சுமத்தை ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். ஜெயலலிதா ஏற்றிய தீபத்தை அணையாமல் காக்க வேண்டும். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதிமுக பொதுச் செயலரானதும் கண்ணீர் மல்க தனது உரையைத் தொடங்கிய சசிகலா, மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சித் தலைமையாக தனது முதல் உரை நேற்று ஆற்றியுள்ளார்.

அதே போல, படுகொலை செய்யப்பட்ட புதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் தலைவர் வி.எம்.சி.சிவக்குமார் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலர் சசிகலா கட்செவி அஞ்சல் மூலம் இரங்கல் செய்தி அனுப்பினார். அதில், இந்தப் படுகொலைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

முதல் அறிக்கை, முதல் பேச்சு என மிகவும் திறமையாக சூழ்நிலைகளைக் கையாள்கிறார் சசிகலா.

முன்னதாகவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்க இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், டிசம்பர் 7ம் தேதி சென்னை வந்தார். அப்போது, சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறிய ஆறுமுகம் தொண்டமானிடம், கச்சத் தீவு தேவாலயத் திறப்பு விழாவில், குறைந்தது 100 தமிழக மீனவர்களையாவது அனுமதிக்க வேண்டும் என்றும், தனது கோரிக்கையை இலங்கை அதிபரிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் சசிகலா கேட்டுக் கொண்டார்.

சசிகலாவின் கோரிக்கையை, ஆறுமுகம் தொண்டமான், இலங்கை அதிபரிடம் எடுத்துரைத்து, 100 தமிழக மீனவர்களுக்கு அனுமதியும் பெற்றுள்ளார்.

கச்சத்தீவு தேவாலய திறப்பு விழாவுக்கு 100 தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதி அளித்திருப்பதுதான், அரசியல் வாழ்க்கையில் சசிகலாவுக்குக் கிடைத்த முதல் அங்கீகாரமாகக் என்று கருதப்பட்டது.

மேலும் தனது அரசியல் பிரவேசத்துக்கு அச்சாணியாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து சசிகலா தனித்தனியே கடிதம் எழுதினார்.

இந்த நிலையில்தான், அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் சசிகலாவை அதிமுக பொதுச் செயலராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 31ம் தேதி சசிகலா அதிமுக பொதுச் செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் பொறுப்பேற்க வரும் போது, சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து வாகனங்கள் அணிவகுக்க அதிமுக தலைமையகத்துக்கு சசிகலா புறப்பட்டார். போயஸ் தோட்டத்தில் இருந்து அதிமுக தலைமையகம் வரை போக்குவரத்து முடக்கப்பட்டு, ஏராளமான கட்சி வாகனங்கள் பின்னணியில் சசிகலாவின் வாகனம் வந்தது.

வாகனத்தின் முன் இருக்கையில் சசிகலா அமர்ந்து கொண்டு, வழி நெடுக காத்திருந்த அதிமுக தொண்டர்களுக்கு வணக்கம் கூறியபடி வந்தார். அதிமுக பொதுச் செயலராக இந்த ஜெயலலிதா, முதல்வர் பதவியேற்க வந்த காட்சியையே இது நினைவூட்டியது.

தலைமையகத்தின் முதல் மாடியில், ஜெயலலிதா நின்று, தொண்டர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தைக் காண்பிக்கும் அதே இடத்தில் நின்றவாறு, அதிமுக தொண்டர்களுக்கு வணக்கம் கூறிச் சென்றார் சசிகலா.

அதிமுக பொதுச் செயலராக அவர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அவர் ஆற்றிய உரையில், நான் கனவிலும்கூட நினைக்காத ஒன்று, கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத ஒன்று நடந்து விட்டது. உடல் நலன் தேறி வந்த ஜெயலலிதா, நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். தன்னை நம்பி வந்த யாரையும் கைவிடாதவர், இன்று தனது மரணத்தின் மூலம் நம் அனைவரையும் கைவிட்டு விட்டார்.
ஜெயலலிதாவுக்கு அதிமுகதான் வாழ்க்கை. எனக்கோ அவர்தான் வாழ்க்கை.

ஆனால், இறைவன் தனது அன்பு மகளை தன்னிடம் அழைத்துக் கொண்டு விட்டார். 75 நாள்கள் எவ்வளவோ போராட்டங்கள். ஜெயலலிதாவை மீட்டுவிட வேண்டும் என்ற மருத்துவர்கள் போராட்டத்தோடு, கோடான கோடி தொண்டர்களாகிய நமது ஆன்மிக வழிபாடுகளும் ஒன்று சேர்ந்தன. அவை ஜெயலலிதாவைக் காப்பாற்றி விடும் என உறுதியாக நம்பினேன். அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு வரும் அளவுக்கு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தும், தலை சிறந்த சிகிச்சைகள் மேற்கொண்டோம்.

லண்டன், சிங்கப்பூர் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சில நாள்களில் பூரண நலம் பெற்று முழுமதியாக போயஸ் தோட்டத்துக்கு அழைத்து வந்து விடுவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன்.

ஆனால், அவரது இதயத் துடிப்பை நிறுத்தி 10 கோடி தமிழ் மக்களின் பாசத் தாயை நம்மிடம் இருந்து இறைவன் பறித்துக் கொண்டான் என்று கண்ணீர் மல்கப் பேசினார் சசிகலா. இந்த பேச்சு அதிமுகவினரை கண்கலங்கவைத்தது. இது சசிகலாவுக்கு இருந்த எதிர்ப்பலையையும் ஆதரவு அலையாக மாற்ற உதவும் என்று அதிமுகவின் தீவிரத் தொண்டர்கள் நம்புகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com