4 இடங்களில் 100 படுக்கை வசதி கொண்டஇஎஸ்ஐ மருத்துவமனை

தமிழகத்தில் 4 இடங்களில் 100 படுக்கை வசதிகளைக் கொண்ட இஎஸ்ஐசி (தொழிலாளர் மாநில ஆயுள் காப்பீட்டுக்கழகம்) மருத்துவமனைகள் கட்டப்படும் என மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.

தமிழகத்தில் 4 இடங்களில் 100 படுக்கை வசதிகளைக் கொண்ட இஎஸ்ஐசி (தொழிலாளர் மாநில ஆயுள் காப்பீட்டுக்கழகம்) மருத்துவமனைகள் கட்டப்படும் என மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற அவர், பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் திருப்பூர், கன்னியாகுமரி, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய நான்கு இடங்களில் ரூ.380 கோடி செலவில் 100 படுக்கை வசதிகளைக் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனைகள் கட்டப்பட உள்ளன. இதற்கான நிலத்தை மாநில அரசு ஏற்கெனவே ஒதுக்கிவிட்டது. எனவே, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு வந்துவிடும். அதுபோல் திண்டுக்கல், ராணிப்பேட்டை, தாம்பரம், கோவில்பட்டி, ஆம்பூர், ராஜபாளையம், விருதுநகர் ஆகிய ஏழு ஊர்களில் 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் கட்டப்பட உள்ளன. மேலும் 400 இஎஸ்ஐ சிகிச்சை மையங்கள், 6 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இஎஸ்ஐசி-யின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை ஒரு கோடியாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தொழிலாளர்களை இஎஸ்ஐசி திட்டத்தின்கீழ் சேர்க்க வருகிற மார்ச் 31 -ஆம் தேதி வரை தொழில் நிறுவனங்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவைப் பொருத்தவரை 1,400 நிறுவனங்களைச் சேர்ந்த 1.9 லட்சம் பேர் இஎஸ்ஐசி-யில் இதுவரை பதிவு செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்ச ஊதியம் ரூ.300 கட்டாயம்: தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி, தொழிலாளர்களுக்கான ஒரு நாள் ஊதியம் ரூ.300 என்பதை, இனி கட்டாயப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், திறனில்லா சாதாரண தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.300 எனவும், திறன்மிக்க தொழிலாளர்களுக்கு ரூ. 334 எனவும், உயர் திறன்மிக்க தொழிலாளர்களுக்கு ரூ.364 எனவும் நிர்ணயிக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com