பழனி பாத யாத்ரீகர்கள் மீது கார் மோதி 5 பேர் சாவு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கார் மோதியதில், பழனிக்கு பாத யாத்திரையாகச் சென்ற 5 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயமடைந்தனர்.
மணப்பாறை அருகே பாத யாத்ரீகர்கள் மீது மோதிய கார்.  (உள்படம்-மேலிருந்து கீழ்) விபத்தில் இறந்த சீனிவாசன், சலீம், குணா.
மணப்பாறை அருகே பாத யாத்ரீகர்கள் மீது மோதிய கார். (உள்படம்-மேலிருந்து கீழ்) விபத்தில் இறந்த சீனிவாசன், சலீம், குணா.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கார் மோதியதில், பழனிக்கு பாத யாத்திரையாகச் சென்ற 5 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயமடைந்தனர்.
திருச்சி பாலக்கரை நடு குஜிலித் தெருவில் டீ கடை வைத்திருப்பவர் அபிப் முகமது மகன் சலீம் (40). இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கடந்த 18 ஆண்டுகளாக தனது கடையில் வேலை செய்யும் பணியாளர்களுக்காக மாலை அணிந்து பழனிக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை அணிந்த சலீம் வெள்ளிக்கிழமை இரவு யாத்திரை புறப்பட்டார்.
திருச்சி சின்ன கம்மாளத் தெருவைச் சேர்ந்த க. சண்முகக்கண்ணு என்ற குணா (40), உறையூர் சன்னதி தெருவைச் சேர்ந்த ரா. துவாரகன் (40), தென்னூர் ஜீவநகர் கோ. சீனிவாசன் (42), உறையூர் முதலியார் தெரு ச. ஹரிஹரசுதன் (24) மற்றும் குமார், ராஜேஷ்கண்ணா, ராஜு, சதீஸ், ஜெகன் என 10 பேர் சலீமுடன் பழனிக்கு உடன் சென்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு ராஜேஷ்கண்ணா, ராஜு, சதீஸ், ஜெகன் ஆகியோர் மரவனூரில் தங்கிய நிலையில், சலீம், குணா, துவாரகன், சீனிவாசன், ஹரிஹரசுதன், குமார் ஆகிய 6 பேரும் ஆலம்பட்டிபுதூரில் தங்கியுள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலை மீண்டும் புறப்பட்ட குழுவினரில் மரவனூரில் தங்கியிருந்த 4 பேர் மணப்பாறை வந்தடைந்த நிலையில், சலீம் தலைமையில் வந்த 6 பேரும் மணப்பாறைக்கு முன்பு உள்ள பாலப்பட்டி பிரிவு அருகே திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, மகாராஷ்டிர மாநிலத்திற்கு சென்றுவிட்டு, தேனி உத்தமபாளையத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த கார், பாத யாத்திரை சென்றவர்கள் மீது மோதியது. இதில், சலீம், குணா, துவாரகன், சீனிவாசன், ஹரிஹரசுதன் அகிய 5 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் பலத்த காயமடைந்த குமார், மணப்பாறை தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று, திருச்சி அரசு மருத்துவமனைக்கு தீவிரச் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், காரில் வந்த தேனி உத்தமபாளையத்தைச் சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் சாம்பாஜி சேட், அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ஐஸ்வர்யா மற்றும் காரை ஓட்டிவந்த அவரது நண்பர் மணப்பாறை மஞ்சம்பட்டி பிரான்ஸிஸ் சேவியர் மகன் ராஜா செபஸ்டின் (23) ஆகியோரும் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இறந்தவர்களின் சடலங்கள் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில், மணப்பாறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநர் ராஜா செபஸ்டினை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com