7 மாத குழந்தைக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு

ஆம்பூரில் 7 மாத குழந்தை பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆம்பூரில் 7 மாத குழந்தை பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் ஏ-கஸ்பா காமராஜர் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் தொழிலாளி கண்ணன். இவரது மனைவி ராமு. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களது 7 மாத குழந்தை கிருபைராஜுக்கு பொங்கலுக்கு சில நாள்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரத்தப் பரிசோதனையில் கிருபைராஜுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது.
அங்கு இரு நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அக்குழந்தையின் பாட்டி இறந்துவிட்டதால் மருத்துவமனை நிர்வாகத்துக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் குழந்தையை எடுத்துக் கொண்டு அதன்பெற்றோர் ஆம்பூர் வந்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் திருப்பத்தூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்துக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் திருப்பத்தூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரக ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான குழுவினர் ஆம்பூருக்கு செவ்வாய்க்கிழமை வந்து அக்குழந்தையின் வீட்டுக்கு சென்றனர்.
பன்றிக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க அவ்வீட்டில் வசிக்கும் குழந்தையின் பெற்றோர், உறவினர்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.
அதோடு ஆம்பூர் நகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் அந்த வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தி மருந்து தெளித்தனர்.
நகராட்சி துப்புரவு அலுவலர் (பொறுப்பு) சிவக்குமார், துப்புரவு ஆய்வாளர் பிரணாகரன், களப்பணி உதவியாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் ஞானசேகர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
திருப்பத்தூர் துணை இயக்குநரக சுகாதார ஆய்வாளர் மனோகரனைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டதற்கு, அவர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். பிறகு இரண்டு நாளில் வீட்டிற்கு திரும்பிவிட்டதால் மருத்துவமனை நிர்வாகம் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆம்பூரில் உள்ள அக்குழந்தையின் வீட்டிற்கு சென்று குழந்தைக்கும், உடனிருக்கும் உறவினர்களுக்கும் மருந்து, மாத்திரைகளை கொடுத்தோம். மேலும் வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மை செய்து மருந்து தெளிக்க ஆவன செய்தோம். குழந்தைக்கு காய்ச்சல் தற்போது குறைந்துள்ளது. பன்றி காய்ச்சல் காற்றில் பரவாது. ஆனால் அக்காய்ச்சல், சளி இருப்பவர்களுக்கு தும்மல் ஏற்பட்டால் உடனிருப்பவர்களுக்கு அது பரவ வாய்ப்புகள் உள்ளது. அதனால் அக்குழந்தையின் உடனிருப்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய்த் தடுப்பு மாத்திரைகளை வழங்கியுள்ளோம் என்றார்.
மருத்துவ முகாம் நடத்த மக்கள் கோரிக்கை : இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டின் சுற்றுப்புறத்தை மட்டுமே நகராட்சி நிர்வாகம் தூய்மைப்படுத்தி மருந்து தெளித்துள்ளது. அக்காய்ச்சல் காற்றில் பரவாது என அதிகாரிகள் தரப்பில் கூறினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏ-கஸ்பா பகுதி முழுவதையும் தூய்மைப்படுத்தி மருந்து தெளிக்க வேண்டும். மேலும் சிறப்பு மருத்துவ முகாமை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com