ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூரில் 2-ஆவது நாளாக போராட்டம்: வெளிமாவட்ட இளைஞர்களும் பங்கேற்பு; கைதான நூற்றுக்கணக்கானோர் விடுவிப்பு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள், பெண்கள்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள், பெண்கள்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது.
இதில் போலீஸார் கைது செய்தவர்களை விடுவிக்ககோரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இளைஞர்கள் மறியல் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு கிராமங்களைத் தொடர்ந்து அலங்காநல்லூரிலும் தடையை மீறி திங்கள்கிழமை காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. போலீஸ் பாதுகாப்பையும் மீறி அங்கு ஏராளமானோர் கூடி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் இங்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டம் செவ்வாய்க்கிழமை காலையிலும் நீடித்தது. காவல்துறையினர் தொடர்ந்து பேச்சு நடத்தியும் போராட்டத்தைக் கைவிட மறுத்தனர். எனவே, வாடிவாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 224 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வாடிப்பட்டி, சோழவந்தானில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அலங்காநல்லூர் பேருந்து நிலையம், கேட்டுக்கடை பகுதிகளில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி பேச்சு நடத்தி கைதானவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவர் என உறுதி அளித்தார். இருப்பினும் பொதுமக்கள் மறியலைக் கைவிடவில்லை. போராட்டத்தால் அலங்காநல்லூரில் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
இதனிடையே, குறவன்குளம், வலசை உள்ளிட்ட பக்கத்து கிராமத்தினரும் அலங்காநல்லூருக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். அதிமுக, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர் என பலரும் பங்கேற்றனர். ஆனால், அரசியல் வேண்டாம் என சிலர் கோஷமிட்டனர்.
அலங்காநல்லூரைத் தொடர்ந்து பாலமேடு, புதுப்பட்டி, கூடல்நகர் உள்ளிட்ட இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே கைதானவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், அவர்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பதாகவும் போராட்டக்காரர்களிடம் போலீஸார் மாலையில் தெரிவித்தனர். ஆனாலும், அவர்களது போராட்டம் இரவும் நீடித்தது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.


மதுரையிலும் நீடிக்கும் போராட்டம்: மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு மாவட்ட நீதிமன்றம் நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அப்பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு அதிமுக சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இதையடுத்து போலீஸார் மாணவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு தமுக்கத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு வந்தனர். அங்கு தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்துபோக மறுத்ததால் போராட்டம் இரவும் நீடித்தது.


திருச்சியில் மாணவர்கள் போராட்டம்:
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர் அமைப்பு, தமிழ் தேசிய பேரியக்கத்தினர் திருச்சியில் செவ்வாய்க்கிழமை மெளன போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். இதேபோல, மாலையில் மாணவர் அமைப்பு சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் சிலரும் பங்கேற்றதாகத் தெரிகிறது. இப்போராட்டத்தின் போது, திருச்சி மாநகர 21-ஆவது பாஜக கிளைத் தலைவரும், வரகனேரி தமிழரசன் மகனுமான சதீஷ்குமார் (22) என்பவர் திடீரென தான் கொண்டுவந்திருந்த, மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப் பார்த்த அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், சதீஷ்குமாரைத் தடுத்து, அவரைக் கைது செய்தனர்.
நவல்பட்டு, மணப்பாறையில் ஜல்லிக்கட்டு:
திருச்சி மாவட்டம், நவல்பட்டு, மணப்பாறை ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நவல்பட்டு மந்தையில் திங்கள்கிழமை இரவு தடுப்புக் கட்டைகள் கொண்டு தாற்காலிக வாடிவாசல் அமைக்கப்பட்டது. இந்த வாடிவாசல் வழியே செவ்வாய்க்கிழமை காலை முதலில் கோயில் காளையும், தொடர்ந்து, நவல்பட்டு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்க இளைஞர்களும், விழாவைக் காண பொதுமக்களும் குவிந்தனர். இதில் மாடு முட்டியதில் மாடுபிடி வீரர் ஒருவர் காயமடைந்தார்.
மணப்பாறையிலும்....:
மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டி, என்.பூலாம்பட்டி பகுதிகளில் தடையை மீறி செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பொத்தமெட்டுப்பட்டியில் 8-க்கும் மேற்பட்ட உள்ளூர் மாடுகள் மட்டும் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் போட்டிப் போட்டு காளைகளை அடக்கினர்.
கோவையில் மீண்டும் போராட்டம்:


ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தியும், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள், மாணவர்களை விடுவிக்கக் கோரியும் கோவையில் இளைஞர்கள், மாணவர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை முற்பகலில் கோவை வ.உ.சி.பூங்காவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் திரண்டனர்.
திருப்பூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு:
திருப்பூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், காளைகளை அடக்க முயன்ற வீரர்களை போலீஸார் தடுத்து துரத்தி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரை அடுத்த அலகுமலை அடிவாரத்தில் விவசாய அமைப்புகள், சமுதாய அமைப்புகள் சார்பில் பொங்கல் விழா, மாடுகளுக்குப் பூஜை செய்யும் விழா ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதன் காரணமாக, மலையடிவாரத்தில் தாற்காலிக வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. அதன் உள்ளே பசுக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பொங்கலிட்டு பூஜை செய்து பொதுமக்கள் வழிபட்டனர். தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அவிழ்த்து விடப்பட்ட காளைகள்:
இந்த பூஜைக்கு பிறகு அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலுக்கு வெளியில் வரிசையாக நிறுத்தப்பட்டன. பின்னர், திடீரென 2 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
கூட்டத்துக்குள் காளைகள் பாய்ந்த காரணத்தால் போலீஸார் உள்ளிட்ட அனைவரும் சிதறி ஓடினர். அதற்குள் மாடுபிடி வீரர்கள் சிலர் கூட்டத்துக்குள் பாய்ந்த காளைகளை அடக்க முயன்றனர். ஆனால், அவர்களை போலீஸார் துரத்தி அடித்தனர். இந்தப் பரபரப்பு ஓய்வதற்குள் அடுத்தடுத்து இரண்டு காளைகள் மீண்டும் வாடிவாசல் வழியாக விடப்பட்டன. அதற்குப் பிறகு காளைகளை விட முடியாதபடி, போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர்.
சேலம் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு:
கூலமேட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள கூலமேட்டில் திங்கள்கிழமை காளைகளுடன் ஸ்ரீமாரியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த இளைஞர்கள் கயிறை விட்டுவிட்டு, காளைகள் ஓட ஆரம்பித்ததும் விரட்டிப் பிடித்தனர். இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை தடையை மீறி ஜல்லிக்கட்டு விட பொதுமக்கள் கூடியதை அறிந்த ஆத்தூர் போலீஸார் விரைந்து சென்று காளைகளைப் பிடித்து கட்டி வைத்தனர். இதனால் பொதுமக்களுக்கும், காளை பிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் ஆகியோருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்.
அவனியாபுரத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்:
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி அவனியாபுரத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள மந்தை திடல் பகுதியில் மாணவர் அமைப்பினர் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு மந்தைத் திடலில் அமர்ந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், இந்தியாவில் பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை காலவரையற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் அவனியாபுரம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
விழுப்புரத்தில் காளை மாடுகளுடன் சாலை மறியல்:
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி, விழுப்புரத்தில் காளை மாடுகளுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர், ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் தலைமையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு காளை மாடுகளுடன் வந்த அவர்கள், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷமிட்டனர்.
புதுச்சேரியில் 50 பேர் கைது:
ஜல்லிலிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி, புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி அண்ணா சிலை அருகே 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, புதுச்சேரி ராஜா திரையரங்கம் அருகே பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

"தீ'யாக பரவிய போராட்டம்!
அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டோரில் 224 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாலமேடு, புதுப்பட்டி, வலசை, சத்திரப்பட்டி, கூடல்நகர், மதுரை காளவாசல், பெரியார் பேருந்து நிலையம் தல்லாகுளம், யா. ஒத்தக்கடை, ஆனையூர் உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.
ஆனையூரில் 50 பேர், தமுக்கத்தில் 15 பேர், பெரியார் பேருந்து நிலையம் அருகே 8 பேர், காளவாசல் சந்திப்பு அருகே 20 பேர் கைது செய்யப்பட்டனர். திருமங்கலத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். உசிலம்பட்டியில் இணையதள நண்பர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். இதேபோல், திண்டுக்கல்லிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பு!
அலங்காநல்லூரில் பொதுமக்கள், இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்திய போராட்டத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி. மூர்த்தி (மதுரை கிழக்கு), பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்தி) ஆகியோர் பங்கேற்றனர். அப்போது சோழவந்தான் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே. மாணிக்கம் வந்தார். அவரை எதிர்த்து அங்கிருந்த திமுகவினர் மற்றும் போராட்டத்தில் இருந்தவர்கள் கோஷமிட்டனர்.
பகலில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோர் வந்து கூட்டத்தினரிடையே பேசினர். அப்போது அரசியல் வேண்டாம் என கூட்டத்தின் ஒரு பகுதியினர் கோஷமிட்டனர். சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் வந்து கூட்டத்தில் அமர்ந்தார். அப்போது அரசியல் வேண்டாம் என சிலர் கோஷமிட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திரைப்பட இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோரும் நேரில் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தில் கைதானவர்களை சீமான், அமீர் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com