போராட்டம் நடத்தியதற்காக கைது செய்வதா? காவல் துறைக்கு தலைவர்கள் கண்டனம்

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காகப் போராட்டம் நடத்தியோர் மீது தடியடி நடத்தி போலீஸார் கைது செய்துள்ளதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் நடத்தியதற்காக கைது செய்வதா? காவல் துறைக்கு தலைவர்கள் கண்டனம்

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காகப் போராட்டம் நடத்தியோர் மீது தடியடி நடத்தி போலீஸார் கைது செய்துள்ளதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: 21 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்திய இளைஞர்களையும், மாணவர்களையும் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்றும், இழுத்துச் சென்றும் காவல் துறையினர் கைது செய்துள்ளது கண்டனத்துக்குரியது. மிக முக்கிய அரசியல் சட்ட ரீதியான அமைப்புகள் அனைத்தும் மத்திய அரசின் விருப்பம் போல் நடக்கின்றன. ஆனால், விலங்குகள் நல வாரியம் மட்டும் தன்னிச்சையாக, சுதந்திரமாகச் செயல்படுகிறது என்ற மாயத் தோற்றத்தை மத்திய அரசு உருவாக்கி, அதில் குளிர் காய்ந்து விட்டது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: தமிழகத்தின் பாரம்பரிய அடையாளத்தைக் காக்கும் வகையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேராடியவர்களை கைது செய்ததோடு, குடிநீர், உணவு வழங்க முன்வரும் பொதுமக்களையும் தடுத்தது மனிதாபிமானமற்ற செயலாகும். எனவே, எந்தவித நிபந்தனையும் இன்றி அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: அறவழியில் போராடியவர்களை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழர்களின் உணர்வுகளுக்கு ஆதரவளிக்க வேண்டிய தமிழக அரசு பீட்டா அமைப்பின் ஆதரவாக மாறி, ஒடுக்குமுறையில் ஈடுபடுவது முறை இல்லை. இதே ஜல்லிக்கட்டு சிக்கலில் மக்களின் உணர்வுகளுக்கு எவ்வாறு ஆந்திர அரசு மதிப்பு அளித்தது தமிழக ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன்: அமைதியான முறையில் போராடியவர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது. இவர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: போட்டியை நடத்த முயன்றோரை தடியடி நடத்தி, கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. அவர்களுக்கு குடிநீர், உணவு வழங்கியவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்ததும் மனிதாபிமானமற்ற செயல். தை மாதம் முடிவதற்குள் ஜல்லிக்கட்டு நடைபெற சட்டப்பூர்வ நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: போராட்டத்துக்கு மதிப்பளித்து தக்கதோர் நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு வலுக்கட்டாயமாக குண்டுகட்டாக தூக்கி கைது செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com