விண்ணைத் தொடும் புத்தகங்களின் விலை அரசு செய்ய வேண்டியது என்ன?

பல புத்தகங்களின் விலை மிக அதிகமாக இருப்பதால், அவற்றை வாங்க வாசகர்கள் தயங்குகிறார்கள்.
விண்ணைத் தொடும் புத்தகங்களின் விலை அரசு செய்ய வேண்டியது என்ன?

பல புத்தகங்களின் விலை மிக அதிகமாக இருப்பதால், அவற்றை வாங்க வாசகர்கள் தயங்குகிறார்கள்.
சென்னையில் 40-ஆவது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள் சுமார் 700 அரங்குகளை அமைத்து புத்தகங்களை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் புத்தகக் கண்காட்சிக்கு ஏராளமான பொதுமக்களும் வந்தவண்ணம் உள்ளனர்.
வாசகர்கள் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கும் அதே நிலையில், விலை அதிகமாக இருப்பதன் காரணமாக பலர் தங்களுக்கு பிடித்தமான நூல்களை வாங்க முடியாமல் திரும்பிச் செல்லும் நிலையுள்ளது. பல புத்தகங்களின் விலை ரூ.500-க்கும் மேல் இருப்பதால், குறைவான புத்தகங்களை மட்டும் வாங்கிச் செல்லும் நிலைக்கு வாசகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
விலை குறைய வேண்டும்: பதிப்பகத்தார் வெளியிடும் நூல்கள் வாசகர்களை முழுமையாகச் சென்றடைய வேண்டுமானால் புத்தகங்களின் விலை கணிசமான அளவுக்கு குறைய வேண்டும். அப்போதுதான் விரும்பிய நூல்களை வாங்கி படிக்க முடியும் என்று வாசகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரு நாள்களுக்கு முன்னர்கூட தனது பேத்தியுடன் கண்காட்சிக்கு வந்த முதியவர் ஒருவர், விலை அதிகம் என்பதால் பேத்தி கேட்ட புத்தகங்களை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
விலை அதிகரிக்க காரணம்: எப்போதும் இல்லாத அளவுக்கு புத்தகங்களின் விலை அதிகரிப்பதன் முக்கிய காரணம் பிரிண்ட் ஆன் டிமான்ட் அடிப்படையில் நூல்களை அச்சடிப்பதே ஆகும். மேலும் காகித விலையேற்றம், கூலி உயர்வு ஆகியவையும் காரணங்களாக கூறப்படுகிறது.
இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன் கூறியது: தற்போது காகிதத்தின் விலை, கூலி உயர்வு, வடிவமைப்புக் கட்டணம் என அனைத்துமே அதிகரித்துவிட்டன.
முன்பெல்லாம் ஒரு புத்தகத்தை குறைந்தது 1500 பிரதிகளையேனும் அச்சடிப்போம். அவை அனைத்தும் விற்று தீர்ந்துவிடும்.ஆனால் தற்போது உடனடியாக அதிக நூல்கள் விற்பனையாவதில்லை. அதனால் "பிரின்ட் ஆன் டிமான்ட்' முறையில் தேவைக்கு மட்டுமே சொற்ப எண்ணிக்கையில் புத்தகங்களை அச்சடிக்கிறோம்.
அதிக பிரதிகளை அச்சடிக்கும்போது ஆகும் செலவைவிட குறைந்த எண்ணிக்கையில் அச்சடிக்கும்போது செலவு அதிகம். இதன் மூலம் ஒரு புத்தகத்தின் விலை 40 சதவீதம் வரை அதிகரித்துவிடுகிறது.
அரசு என்ன செய்ய வேண்டும்? கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசு நிறுவனத்தில் இருந்து காகிதங்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும். தற்போது அவை பாடநூல்கள் அச்சடிக்கச் சென்று விடுகின்றன. புத்தகங்களை அச்சடிக்க மத்திய மாநில அரசுகள் குறைந்த விலையில் காகிதங்களை கொடுத்தாலே ஓரளவு விலை குறையும்.
அதேபோல தமிழகத்தில் உள்ள 4,472 நூலகங்களுக்கும் புத்தகங்கள் வாங்கப்பட்டால்,
"பிரின்ட் ஆன் டிமான்ட்' மூலம் ஏற்படும் செலவு குறையும். மேலும் ராணுவத்தில் ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிப் புத்தகங்கள் வாங்கப்படுகின்றன. ஆனால் தமிழ் நூல்கள் வாங்கப்படுவதில்லை.
எனவே அனைத்து நூலகங்களுக்கும் முறையாக புத்தகங்களை வாங்குவது மற்றும் குறைந்த விலையில் காகிதம் வழங்குவது போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டால் புத்தகத்தின் விலை குறையும். மேலும் பொதுமக்களும் அதிக நூல்களை வாங்கிப் படித்தாலும் விலை கணிசமாகக் குறையும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com