இளைஞர்களின் கோரிக்கையை அரசு ஏற்க தலைவர்கள் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: ஜல்லிக்கட்டு கோரி மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தி வரும் மெரீனா கடற்கரை பகுதியில் மின்சார விளக்குகளை அணைத்து வைத்துள்ள சென்னை மாநகர காவல் துறைக்கு என் கடும் கண்டனம். தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாசாரத்தைக் காப்பாற்றக் கோரி நடைபெறும் போராட்டப் பகுதியை அதிமுக அரசு இப்படி இருட்டடிப்பு செய்திருப்பது வேதனையளிக்கிறது. போராடும் மாணவர்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடனே சந்தித்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்: ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு எந்த முயற்சியும் செய்யாமல் வேடிக்கை பார்ப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். போராடும் மாணவர்களைச் சந்தித்து பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது பொறுப்பைத் தட்டிக் கழிப்பது ஏன்? இந்தப் போராட்டம் பெரிய அளவில் வெடித்து சட்டம் -ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்பட்டால், அதற்கு மத்திய, மாநில அரசுகள்தான் பொறுப்பு.
பாமக நிறுவனர் ராமதாஸ்: மக்கள் சக்தியை அளவிட முடியாத தமிழக அரசு, பாலமேட்டிலும், அவனியாபுரத்திலும் தடியடி நடத்திப் போராட்டக்காரர்களை கலைத்தது போன்று அலங்காநல்லூர் போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டனர். அதன் விளைவு அமைதியாக முடிய வேண்டிய போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. மாணவர் சக்தி எல்லையில்லா வலிமை கொண்டது. உலகின் பல நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாக அமைந்தவை மாணவர்களின் போராட்டங்கள்தான். எனவே, மாணவர்களின் உணர்வை மதித்து, தமிழக அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி: மதம், சாதி, மத பேதங்களை மறந்து, நாம் தமிழர்கள் என்ற உணர்வு ஒன்றையே தங்கள் அடையாளமாக கொண்டு போராடும் மாணவர்களும் இளைஞர்களும் பாராட்டுக்குரியவர்கள். மத்திய, மாநில அரசுகள் இவர்களின் உணர்வுகளை இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதற்காக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டங்களில் எந்த உள்நோக்கமும் கிடையாது என்பதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா: ஜல்லிக்கட்டு தடைக்குப் பின்னால் உள்ள உண்மைகளை மாணவர்கள் தெளிவாக உணர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் உணர்வுகளின் வடிவமாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டங்களுக்கு மதிப்பளித்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாணவப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com