தீவிரமடைகிறது ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கான தடைகளை நீக்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
திருவள்ளூரில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
திருவள்ளூரில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

ஜல்லிக்கட்டுக்கான தடைகளை நீக்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில், பச்சையப்பன் கல்லூரி, திருமலை கல்லூரி, சவிதா கல்லூரி, வெங்கடேஸ்வரா கல்லூரி, செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் கல்லூரி, சோழிங்கநல்லூர் இந்துஸ்தான் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆங்காங்கே சாலை மறியல், ஆர்ப்பாட்டம், பேரணி என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூரில்...
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பென்னலூர் ஸ்ரீ வெங்கடேஷ்வரா பொறியியல் கல்லூரி, அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து, சுங்கச்சாவடி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல தண்டலம் பகுதியில் உள்ள சவிதா பொறியியல் கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகத்தில்...
மதுராந்தகத்தை அடுத்துள்ள புழுதிவாக்கம் அக்ஷ்சயா பொறியியல் கல்லூரி, பையம்பாடி ஸ்ரீ சந்தோஷி தொழில்நுட்பக் கல்லூரிகளை மாணவர்கள் 600-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரமேரூரில்...
உத்தரமேரூர் அருகே உள்ள மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நெல்வாய் கூட்டு சாலையில் உள்ள ஏ.சி.டி. பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டில்...
மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், அரிமா சங்கத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல திருக்கழுகுன்றம் பேருந்து நிலையத்தில் அன்னை தெரசா கல்லூரி, ஆசான் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகேந்திரா சிட்டியில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூரில்...
திருவள்ளூர் மாவட்டத்தில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் நட்பாக உள்ள இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து திருவள்ளூர் ஆயில் மில் அருகில் மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.
இப்போராட்டத்தில், திருவள்ளூர் திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், பாமக மாவட்டச் செயலாளர் நா.வெங்கடேசன், இளைஞரணிச் செயலாளர் இ.தினேஷ்
குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற இப்போராட்டத்தின் போது, மணவூரைச் சேர்ந்த விஜயன் (24), அங்கிருந்த செல்லிடப்பேசி கோபுரத்தின் மீது ஏறி ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்காவிட்டால் குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர், திருவள்ளூர் டிஎஸ்பி ஈஸ்வரன் தலைமையிலான போலீஸார் அந்த இளைஞரிடம் பேசி அவரை கீழே வரவழைத்தனர். பின்னர் அவரைக் கைது செய்தனர்.
திருத்தணியில்...
திருத்தணியில் 500-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் சென்னை - திருப்பதி புறவழிச் சாலையில் இருந்து ரயில் நிலையம் வரை முக்கிய வீதிகள் வழியாகப் பேரணியாகச் சென்றனர்.
கும்மிடிப்பூண்டியில்...
கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள், புதன்கிழமை காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்குன்றத்தில்...
மாதவரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் சுமார் 1,500 பேர் வகுப்பை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இதேபோல், புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதையடுத்து, காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com