40-வது சென்னைப் புத்தகக் கண்காட்சி நிறைவு: ரூ.18 கோடிக்கு நூல்கள் விற்பனை!

சென்னையில் நடைபெற்று வந்த 40-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.
புத்தக கண்காட்சியின் இறுதி நாளில் (ஜன.19) புத்தகங்களை ஆர்வத்துடன் தேடும் பொதுமக்கள். (உள்படம்) புத்தகங்களை ஆர்வத்துடன் வாசிக்கும் சிறுவர்-சிறுமியர்.
புத்தக கண்காட்சியின் இறுதி நாளில் (ஜன.19) புத்தகங்களை ஆர்வத்துடன் தேடும் பொதுமக்கள். (உள்படம்) புத்தகங்களை ஆர்வத்துடன் வாசிக்கும் சிறுவர்-சிறுமியர்.

சென்னையில் நடைபெற்று வந்த 40-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ("பபாசி') சார்பில் 40-ஆவது புத்தகக் கண்காட்சி சென்னை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடைபெற்று வந்தது. கடந்த 6-ஆம் தேதி முதல் இந்த கண்காட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கண்காட்சி வியாழக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
இந்த கண்காட்சியில், நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், சுமார் 700 அரங்குகளை அமைத்து தங்களது புத்தகங்களை விற்பனை செய்து வந்தனர். மேலும் லட்சக்கணக்கான வாசகர்கள் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
சிறப்பு ஏற்பாடுகள்: இந்த புத்தகக் கண்காட்சிக்கு வரும் வாசகர்களின் வசதிக்காக கழிப்பிட வசதி, வாகன நிறுத்தம் வசதி, உணவு வசதி என அனைத்து வசதிகளையும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் செய்திருந்தது. மொத்தம் 14 நாள்களுக்கு இந்த கண்காட்சி தொடர்ந்து நடைபெற்றது. இதில் 7 நாள்கள் விடுமுறை நாள்களாகும். அதனால் ஏராளமான பொதுமக்கள் புத்தகக் கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
புதிய நூல்கள்: இந்த ஆண்டு நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்வதற்காகவே பல பதிப்பகங்கள் புதிய நூல்களைப் பதிப்பித்திருந்தன. பிரபலமான பல புத்தகங்களுக்கு இடையில் இதுபோன்ற புதிய நூல்களையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். மேலும் இந்த புத்தகக் கண்காட்சி பல புதிய படைப்பாளர்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
ரூ.18 கோடிக்கு விற்பனை: கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஜனவரி மாதம் நடைபெற வேண்டிய புத்தகக் கண்காட்சி கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. அப்போது, ரூ. 15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட பண மதிப்பிழப்பு அறிவிப்பின் காரணமாக, பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த சூழலில், புத்தகக் கண்காட்சி நடைபெற்றதால் புத்தக விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இருக்குமா? என்ற சந்தேகம் இருந்தது. எனினும், பணத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க "ஸ்வைப்பிங்' வசதி, ஏடிஎம் மைய வசதி, பண டோக்கன் வசதி ஆகிய வசதிகளை ஏற்பாட்டாளர்கள் செய்திருந்தனர். இதன் காரணமாக, கடந்த ஆண்டைவிட அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு மட்டும் ரூ. 18 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகின.
12 லட்சம் பேர் வருகை: அதே வேளையில், இந்தாண்டு புத்தகக் கண்காட்சிக்கு குழந்தைகள், பெரியோர்கள் என பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த சுமார் 12 லட்சம் பேர் வருகை புரிந்திருந்தனர். இதன் காரணமாக, கடந்த 14 நாள்களும் புத்தகக் கண்காட்சி நடைபெற்ற செயின்ட் ஜார்ஜ் பள்ளி திருவிழாக்கோலமாக காட்சியளித்தது.
இறுதி நாளில் குவிந்த வாசகர் கூட்டம்
சென்னையில் நடைபெற்று வந்த 40-ஆவது புத்தகக் காட்சி வியாழக்கிழமையுடன் (ஜன.19) முடிவடைந்தது. கண்காட்சியின் முதல் நாளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான வாசகர்கள் கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
இதனால் கடந்த 14 நாள்களாக கண்காட்சி வளாகம் திருவிழாக்கோலமாக காணப்பட்டது. இந்த நிலையில் இறுதி நாளான வியாழக்கிழமையும் ஏராளமான வாசகர்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இதனால் இறுதி நாளிலும் புத்தகக் கண்காட்சி வளாகம் பரபரப்பாக இருந்தது.
மேலும் இறுதி நாளில் பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சீருடைகளுடன் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com