ஜல்லிக்கட்டு: சட்டப்பேரவையை உடனே கூட்டி சட்டம்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்டி, ஜல்லிக்கட்டுக்காக சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின்
ஜல்லிக்கட்டு: சட்டப்பேரவையை உடனே கூட்டி சட்டம்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்டி, ஜல்லிக்கட்டுக்காக சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவசரச் சட்டம் கொண்டு வர முடியாது என்று பிரதமர் மோடி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறியிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.
இப்படியொரு சூழல் உருவாகக் கூடாது என்பதற்காகவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும், போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பிரநிதிகளையும் அழைத்துக் கொண்டு சென்று பிரதமரை சந்தித்து முறையிடுமாறு முதல்வருக்குக் கோரிக்கை விடுத்தேன். ஆனால், திமுகவின் கருத்தினை ஓ.பன்னீர்செல்வம் கேட்காமல் தான் மட்டும் தனியாகச் சென்று சந்தித்ததன் விளைவால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஒரு அவசரச் சட்டத்தைக் கூட மத்திய அரசு நிறைவேற்ற இயலாது என்று மறுத்து விட்டது.
தமிழகமெங்கும் தன்னெழுச்சியுடன் மாணவர்களும், மக்களும் நடத்தும் போராட்டத்தின் உணர்வுகளை மத்திய அரசு உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது. மத்திய அரசும் கைவிரித்து விட்ட நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
எனவே, இந்த அசாதாரண சூழ்நிலை பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். அதனைத் தொடர்ந்து சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை வெள்ளிக்கிழமை (ஜன.20) கூட்டி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
தமிழக அரசின் தலைமை வழக்குரைஞரின் ஆலோசனையையும் பெறலாம். ஏற்கனவே, ஜல்லிக்கட்டு தொடர்பாக 2014-இல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பிரபல சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
அந்தத் தீர்ப்பில் திமுக அரசின் ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டத்தில் ஏதேனும் குறைகள் சுட்டிக்காட்டப்பட்டிருப்பின் அதையும் நிவர்த்தி செய்து, புதியதொரு ஜல்லிக்கட்டு நெறிமுறைப்படுத்தும் சட்டத்தை, சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com