தமிழகத்துக்கு துணை நிற்போம்: மோடி

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவாகத் துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
தமிழகத்துக்கு துணை நிற்போம்: மோடி

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவாகத் துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்புக்கு பிறகு பிரதமர் அலுவலகம் சுட்டுரை பக்கத்தில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அப்போது நடைபெற்ற ஆலோசனையின் போது, ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடை குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழக கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாக ஜல்லிக்கட்டு உள்ளதை வரவேற்ற பிரதமர், தற்போது அது தொடர்புடைய விவகாரத்தில் முடிவெடுப்பது நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாக அமையும் என்று கருதினார். தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும். தமிழகத்தில் வறட்சியால் ஏற்பட்டுள்ள நிலைமையை சரிசெய்ய அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் உறுதியளித்தார். தமிழகத்துக்கு மத்திய குழு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்' என்று சுட்டுரையில் குறிப்பிடப்பட்டது.

அரசியலமைப்பு சட்ட நிபுணர்கள் யோசனை
ஜல்லிக்கட்டு அவசரச் சட்ட விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்று அரசியலமைப்பு சட்ட நிபுணர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:
அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி: ஜனநாயக நாட்டில் நீதியை நிலைநாட்டக் கூடிய உச்சபட்ச அமைப்பு உச்ச நீதிமன்றம். அதன் தீர்ப்பை ஏற்க முடியாது என்ற நிலைப்பாட்டை எடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. அதே சமயம், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் "விலங்குகள் கொடுமைப்படுத்துதலை' முற்றிலுமாக தவிர்க்கும் வழிமுறைகள், கட்டுப்பாடுகள் நிறைந்த புதிய சட்டத்தை மாநில அரசு கொண்டு வர உரிமை உண்டு. ஆனால், அதை "பீட்டா' உள்ளிட்ட வழக்குத் தொடுத்தவர்கள் ஆட்சேபித்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட முடியும். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்ற ஆய்வுக்கு மாநில அரசின் அவசரச் சட்டத்தை உள்படுத்திய பிறகு அதன் அனுமதியை பெறும் நிலை ஏற்படலாம்.
சோலி சொராப்ஜி: மதம், வழிபாடு, பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றில் மக்களின் உணர்வுகளைப் பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அந்த உரிமைகளுக்காக மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்படாமல் தடுப்பதும் மாநில அரசின் பொறுப்பு. இந்த விஷயத்தில் அவசரகதியில் அவசரச் சட்டம் கொண்டு வந்து மீண்டும் ஒரு சர்ச்சைக்கு வழிவகுக்காமல், தற்போது நிலுவை வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

சினிமா காட்சிகள் ரத்து
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் வெள்ளிக்கிழமை (ஜன.20) இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ள செய்தி:
ஜல்லிக்கட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம் தன்னை இணைத்துக் கொள்கிறது. தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்துச் செய்யப்படுகின்றன என தெரிவித்தார்.
நடிகர் சங்கம் இன்று உண்ணாவிரதம்: ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு துணை நிற்கும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் காலை 9 மணிக்கு தொடங்கும் உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடைபெறுகின்றன. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com