சென்னையில் கடை அடைப்பு போராட்டம் வெற்றி: வெறிச்சோடிய சாலைகள், தெருமுனைகளில் திரண்ட குழந்தைகள்

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடை அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாக வணிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடை அடைப்பு போராட்டத்தின் காரணமாக வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம், அதையொட்டிய சாலை.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடை அடைப்பு போராட்டத்தின் காரணமாக வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம், அதையொட்டிய சாலை.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடை அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாக வணிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
போராட்டத்தையொட்டி, அரசு -தனியார் வாகனங்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், சிறு வியாபார நிறுவனங்கள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்தன.
பால் முகவர்கள் காலை 8 மணி வரை பால் விற்பனை செய்துவிட்டு பின்னர் கடைகளை அடைத்தனர். சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகங்கள், சிறிய அளவில் செயல்படும் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்கள் திறக்கப்படவில்லை.
கோயம்பேடு சந்தை: கோயம்பேடு சந்தையில் உள்ள சுமார் 4,500 மொத்த, சில்லறை வியாபாரிகள் காலை 10 மணிக்கு பிறகு கடைகளை அடைத்துப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர். கடையடைப்பு போராட்டம் திடீரென அறிவிக்கப்பட்டதால் அங்குள்ள பழக்கடைகள், பூக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விற்பனை நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கோயம்பேடு வியாபாரிகள் ஒருமித்த உணர்வுடன் கடைகளை பூட்டி விட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிகள், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றக் கூடிய ஊழியர்கள் தங்களது நிறுவனங்களுக்கு முன்பு அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். சாலிகிராமத்தில் ஒரு தனியார் வணிக வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளில் பணியாற்றும் ஊழியர்களும் நுழைவு வாசலில் அமர்ந்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் மருந்துகடை உரிமையாளர்களும் பங்கேற்றனர். பாரிமுனை, உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஒரு சில ஹோட்டல்கள் திறந்திருந்தன. அவற்றில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆகியவை சார்பில் அறிவிக்கப்பட்ட கடை அடைப்பு பெரும் வெற்றி பெற்றதாக அந்த சங்கங்களின் நிர்வாகிகளான ஏ.எம்.விக்கிரமராஜா, த.வெள்ளையன் ஆகியோர் தெரிவித்தனர்.
முன்னதாக, வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கலந்துகொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மாணவர் வருகை குறைவு: கல்வி நிலையங்களைப் பொருத்தவரை சென்னையில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் 2 நாள்களாக மூடப்பட்டிருந்தன. தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டதால் மாணவர்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. இதனால் பள்ளி வேன்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. அரசு பள்ளிகள் மட்டும் செயல்பட்டன. அவற்றிலும் மாணவர்கள் வருகை குறைவாகவே இருந்தது.
போக்குவரத்து பாதிப்பு:
சென்னையின் முக்கிய அங்கமாக விளங்கும் கால்டாக்ஸிகள் வெள்ளிக்கிழமை இயக்கப்படவில்லை. சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் கால்டாக்சிகள் ஓடவில்லை.
குறைந்த அளவில் இயக்கப்பட்ட பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. இருப்பினும் ஆட்டோக்கள் ஓரளவுக்கு ஓடின. இதனால் வழக்கமாக பேருந்து -ரயில்களில் செல்லும் பயணிகள் வெள்ளிக்கிழமை ஆட்டோக்களில் பயணம் செய்தனர். பேருந்துகள் முழுமையாக ஓடாததால் பேருந்து நிலையங்களில் ஏராளமான பயணிகள் காத்திருந்ததை பார்க்க முடிந்தது.
தெருமுனைகளில் குவிந்த குழந்தைகள்: இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தியாகராய நகர், நுங்கம்பாக்கம், அடையாறு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் தெருமுனைகளில் குவிந்த குழந்தைகள் பீட்டா அமைப்பை கண்டித்து கோஷம் எழுப்பினர். அதேபோன்று இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்களில் இளைஞர்கள் குழுக்களாகச் சென்று ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், முக்கிய சந்திப்புகளுக்கு பயணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையில் சிலம்பாட்டம்:
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், போரூர் ஆகிய பகுதிகளில் திரண்ட தமிழ் ஆர்வலர்கள், இளைஞர்கள் சிலம்பாட்டம் உள்பட தமிழர் கலாசாரத்தை வலியுறுத்தும் கலைகளை நடத்தி, ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com