ஜல்லிக்கட்டு: 5-ஆவது நாள் போராட்டத்தில் 5 லட்சம் பேர்

மெரீனா கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற ஐந்தாவது நாள் போராட்டத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற 5-ஆம் நாள் போராட்டத்தில் குவிந்திருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற 5-ஆம் நாள் போராட்டத்தில் குவிந்திருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள்.

மெரீனா கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற ஐந்தாவது நாள் போராட்டத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, சென்னை மெரீனா கடற்கரை விவேகானந்தர் இல்லம் எதிரே செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. 200 பேருடன் தொடங்கிய இந்தப் போராட்டம் பெரிய அளவில் உருவாகிவிட்டது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றதால் சுமார் 7 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். பொதுமக்கள் இரவும் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், கடற்கரையிலேயே இரவு முழுவதும் தங்கினர். பனிப்பொழிவை பொருட்படுத்தாமல் கூட்டம், கூட்டமாக விறகில் தீ மூட்டி, குளிர் காய்ந்தபடி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவில் பனியை பொருட்படுத்தாமல் தீயை மூட்டி...: இவர்கள் அனைவரும் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரே நேரத்தில் செல்லிடப்பேசி ஒளியை ஒளிரச் செய்து, மணல் பரப்பை ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தினர். மெரீனா கடற்கரையில் வெள்ளிக்கிழமை இரவு மட்டும் சுமார் 1 லட்சம் பேர் இருந்தனர். இரவு தங்கியிருந்தவர்கள் சனிக்கிழமை காலை வீட்டுக்குச் செல்லத் தொடங்கினர். அதேவேளையில், காலை 10 மணிக்கு பின்னர் மீண்டும் இளைஞர்களும், மாணவர்களும் மெரீனாவுக்கு வரத் தொடங்கினர்.
இளைஞர்களும், மாணவர்களும் விரைவு: இதனால் மெரீனா கடற்கரை மீண்டும் திணறியது. ஒரே நேரத்தில் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள், வேன்கள் ஆகியவற்றில் வந்ததால், மெரீனாவை நோக்கி வரும் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. நண்பகல் 12 மணிக்குள் மெரீனா கடற்கரை வாகன நிறுத்துமிடம் நிரம்பியதால், பொதுமக்கள் லூப் சாலை, சாந்தோம் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, சுவாமி சிவானந்தா சாலை, வாலஜா சாலை, ராஜாஜி சாலை ஆகியப் பகுதிகளில் நிறுத்தினர். தனியார் வளாகங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிலும் வாகனங்களை பொதுமக்களை வாகனங்களை நிறுத்தினர்.
விரிவடைந்த போராட்டம்: கடந்த 4 நாள்களாக விவேகானந்தர் இல்லம் எதிரே மட்டும் போராட்ட களம் இருந்ததால், பெரும் மக்கள் நெரிசல் ஏற்பட்டது. இதனால், சனிக்கிழமை காந்தி சிலை, திருவள்ளுவர் சிலை, பார்த்தசாரதி கோயில் நுழைவாயில் எதிரே ஆகிய இடங்களிலும் போராட்ட மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டம் பரவலாக காணப்பட்டது. இருப்பினும், விவேகானந்தர் இல்லம் அருகே மக்கள் நெரிசல் ஏற்படவே செய்தது. இதனால், மக்கள் சிறு, சிறு குழுக்களாக கடற்கரை மணல் பரப்பில் நின்றபடி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மென்பொறியாளர்கள் அதிகம் பேர் பங்கேற்பு: இந்த நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால் மென்பொருள் பொறியாளர்கள் அதிகப்படியாக போராட்டத்தில் பங்கேற்றனர். அதேபோல பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை என்பதால் மாணவர்களும் அதிகளவில் பங்கேற்றனர்.
குடும்பத்துடன் கோஷம்: நடுத்தர வயதினர் கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து பீட்டாவை கண்டித்தும், ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரியும் குடும்பத்துடன் கோஷமிட்டனர்.
மேலும் கடந்த 4 நாள்களை விட, அதிகளவில் வடை, பஜ்ஜி கடைகளும், குளிர்பான கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களுக்கு தேவையான உணவு எந்த தடையும் இல்லாமல் கிடைத்தது. அதேபோல பொதுமக்கள் வீடுகளில் இருந்து தேனீர்,குளிர்பானங்கள் ஆகியவற்றை வீட்டில் இருந்து தயாரித்து வந்து,போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் வழங்கினர்.
நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள்:
போராட்டத்தில் பங்கேற்பவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஆங்காங்கு தப்பாட்டம், ஓயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


போராட்டத்துக்கு தமிழே தலைமை

ஜல்லிக்கட்டை வலியுறுத்தி, தலைமையில்லாமல் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டத்துக்கு தமிழ்தான் தலைமை என நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கூறினார்.
ஜல்லிக்கட்டை வலியுறுத்தி, இரவு-பகல் பாராமல் ஐந்தாவது நாளாக (ஜன.21) சென்னை மெரீனா கடற்கரையில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ராகவா லாரன்ஸ் பேசியதாவது:
இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து, நலிந்து வரும் விவசாயம்-விவசாயிகள் பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனை, காவிரி பிரச்சனை, ஊழல், அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் பிரச்னை போன்றவற்றுக்காகவும் போராட வேண்டும் என்று கூறினார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சை நிறைவு செய்தபோது, அங்கு கூடியிருந்த ஆண்கள் டாஸ்மாக்(மதுக்கடை) எனக் குரல் எழுப்பினர்.
இதையடுத்து "குடி குடியைக் கெடுக்கும்' என்பதை பெண்களைத் தொடர்ந்து, ஆண்களும் உணர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது; ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடர்ந்து, மற்ற பிரச்னைகளுக்கும் நாம் போராடலாம். முதல்வர், பிரதமர் ஆகியோர் உறுதியாக இருந்தால், நமது உரிமையை பீட்டா அமைப்பு உள்பட யாரும் பறிக்க முடியாது என்றார் ராகவா லாரன்ஸ்.

5 லட்சம் பேர்

போராட்டத்துக்கு காலை 10 மணிக்கு தொடங்கி பொதுமக்கள் வந்துக் கொண்டே இருந்தனர். மாலை 3 மணிக்குள் சுமார் 5 லட்சம் பேர் மெரீனாவில் குவிந்ததால், கடற்கரையே ஸ்தம்பித்தது. கடற்கரை மணல் பரப்பு தெரியாதளவுக்கு மக்கள் கூட்டம் இருந்தது. இதன் விளைவாக மக்கள் கடற்கரைக்குள் செல்வதற்கும், கடற்கரையில் இருந்து வெளியே வருவதற்கும் மிகவும் சிரமப்பட்டனர். அதேபோல போக்குவரத்து நெரிசலும் மாலையில் கடுமையாக ஏற்பட்டது.

சட்ட அறிவிப்பு வெளியாகியும் கலையாத கூட்டம்

மாலையில் ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டு அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படாலும், கூட்டம் கலைந்து செல்லவில்லை. மேலும் போராட்டக் குழுவினர், காளைகளை காட்சிப் பட்டியலில் இருந்து நீக்கும் வரையிலும், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரையிலும் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.
இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட யாரும் கலைந்து செல்லவில்லை. இதனால், ஞாயிற்றுக்கிழமையும் போராட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com