ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி திமுகவினர் ரயில் மறியல்; கைது

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர்.
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர்.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு, திருமால்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் திமுகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் மறியலை முடித்துவிட்டு வந்த திமுகவினர் 200-க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த காஞ்சிபுரம் போலீஸார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 200 பேரை கைது செய்தனர்.
மதுராந்தகத்தில்...
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மதுராந்தகம், மேல்மருவத்தூர் ரயில் நிலையங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த 287 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
மதுராந்தகம் ரயில் நிலையம் வழியாக காலை 10.20 மணிக்கு செல்லும் குருவாயூர் விரைவு ரயிலை மறித்து, எம்எல்ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி தலைமையிலான திமுகவினர் 154 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த மதுராந்தகம் போலீஸார் மறியலில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்தனர்.
மேல்மருவத்தூரில்...
மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் சென்னை-கன்னியாகுமரி விரைவு ரயில் மற்றும் சென்னை-குருவாயூர் விரைவு ரயில் ஆகிய ரயில்களை மறித்து, செய்யூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி.அரசு தலைமையிலான திமுகவினர் 133 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை மேல்மருவத்தூர் போலீஸார் கைது செய்தனர்.
அறிவிப்பின்றி ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் போராட்டம்
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக வெள்ளிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில், எவ்வித அறிவிப்பும் இன்றி இயக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில்வே மேலாளரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் திமுகவினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால், ரயில் நிலையத்தில் திருமால்பூர்-சென்னை கடற்கரை செல்லும் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மேலும், அந்த ரயிலில் செல்ல டிக்கெட் கேட்ட பயணிகளுக்கு ரயில் புறப்படும் நேரம் அறிவிக்கப்பட்ட பின்னர் வழங்கப்படும் என ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால், பயணச் சீட்டு வாங்காமலும், ரயிலில் ஏற முடியாமலும் பயணிகள் அறிவிப்புக்காகக் காத்திருந்தனர்.
இந்த நிலையில், திடீரென எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அந்த ரயில் இயக்கப்பட்டது. ரயில் புறப்பட்டுச் சென்றதால் ஆத்திரமடைந்த பயணிகள் நிலைய மேலாளரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ரயில்வே மேலாளர் மற்றும் அலுவலர்கள் அவர்களை சமாதானப்படுத்தி, அடுத்து வந்த அரக்கோணம்-புதுச்சேரி ரயிலில் அனுப்பி வைத்தனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, மதுராந்தகம் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட
எம்எல்ஏ நெல்லிகுப்பம் புகழேந்தி தலைமையிலான திமுகவினர். (வலது) மதுராந்தகத்தில் அந்நிய நாட்டு குளிர்பானங்களை
சாலையில் ஊற்றி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வணிகர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com