ஜல்லிக்கட்டு: வென்று காட்டும் மாணவர்கள்

பல்வேறு சிரமங்களையும்,சோதனைகளையும் தாண்டி மாணவர்கள் ஒற்றுமையுடன் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகவே, ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது.
உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கும் தன்னார்வலர்கள்.
உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கும் தன்னார்வலர்கள்.

பல்வேறு சிரமங்களையும்,சோதனைகளையும் தாண்டி மாணவர்கள் ஒற்றுமையுடன் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகவே, ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது.
சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (17-ஆம் தேதி)காலை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, போராட்டம் நடத்த கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் சுமார் 200 பேர் குவிந்தபோது, போலீஸார் அதை மிகவும் சாதாரணமாக பார்த்தனர். அவர்களை சிறிது நேரத்துக்குப் பின்னர் கைது செய்து, நண்பகல் உணவே அளித்து அனுப்பி விடலாம் என காவல்துறை அதிகாரிகள் நினைத்தனர்.
ஆனால், இன்று அந்தப் போராட்டம் இன்று ஒட்டுமொத்த தமிழகத்தையே புரட்டிப் போட்டுள்ளது. உலகையே பிரமிக்க வைக்கும் அளவுக்கு மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் அமைந்துள்ளது. சிறு அசம்பாவிதம் கூட இன்றி நடத்தப்பட்டு வரும் இந்தப் போராட்டம், வருங்காலங்களில் நடைபெறவுள்ள பல போராட்டங்களுக்கு முன்னோடியாக அமைய உள்ளது.
இந்தப் போராட்டம் வெற்றியை நோக்கி செல்வதற்கு அதை ஒருங்கிணைக்கும் 136 பேரின் பங்கு மிக முக்கியமானது. இவர்கள், ஏற்கெனவே கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையை பெருவெள்ளம் சூழ்ந்தபோது ஒருங்கிணைந்து பணியாற்றியவர்கள் ஆவார்கள். இதனால் இவர்கள் முகநூல், கட்செவி அஞ்சல் ஆகியவற்றின் தங்களுக்குள் ஒரு வட்டத்தை அமைத்திருந்தனர். ஜல்லிக்கட்டுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் தொடங்கியதும், தங்களுக்குள் வாதங்களை இவர்கள் நடத்தினர்.
136 ஒருங்கிணைப்பாளர்கள்: அதன் ஒரு பகுதியாகவே, செவ்வாய்க்கிழமை போராட்டத்தை விவேகானந்தர் இல்லம் முன்பு தொடங்கினர். இந்தப் போராட்டத்துக்கு மாணவர்கள், இளைஞர்கள் பேராதரவு கிடைத்த உடன்,அந்தப் போராட்டத்தை மிகப்பெரிய அளவில் கட்டமைக்கத் தொடங்கினர். ஆனால், அதற்கு முன்னர் அவர்கள், பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் கடந்தனர்.
முதல் கட்டமாக, 136 ஒருங்கிணைப்பாளர்கள் தங்களுக்குள் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தினர். பின்னர், போராட்டத்தை ஒருங்கிணைக்க அவர்கள் 12 குழுக்களாகப் பிரிந்தனர். இந்த 12 குழுக்களே முழு போராட்டத்தையும் இப்போது நடத்தி வருகிறது. இந்த 12 குழுக்களில், சுமார் 2 ஆயிரம் தன்னார்வலர்கள் உள்ளனர். இவர்களே போராட்டத்தை தினமும் கட்டுப்பாடு குலையாமல் நடத்தி வருகின்றனர்.
12 பிரிவுகள்: போக்குவரத்து, சுகாதாரம், மருத்துவம், உணவு, துப்பரவு என 12 பிரிவுகளாக இந்தக் குழு இயங்கி வருகிறது. இந்த 12 பிரிவுக்கும் செல்லிடப்பேசி கட்செவி அஞ்சலில் தனித்தனியாக குழுக்கள் இயங்குகின்றன. அதேபோல, 136 ஒருங்கிணைப்பாளர்கள் தங்களுக்கு என்று தனியாக ஒரு குழுவை நடத்துகின்றனர். இந்தக் குழுக்களின் மூலம் போராட்டத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களும் பேசப்பட்டு முடிவு எடுக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் 136 ஒருங்கிணைப்பாளர்களும் தினமும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஒவ்வொரு நாளும் நடைபெறும் போராட்டத்தில் நடைபெறும் குறைகளையும், நிறைகளையும் பேசி முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர்.
அங்கு எடுக்கப்படும் முடிவுகளே 12 பிரிவுகளிலும் செயல்படுத்தப்படுகிறது. தன்னார்வலர்களில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், மென்பொருள் பொறியாளர்கள், பெண்கள் ஆகியோர் அதிகளவில் உள்ளனர். ஒவ்வொரு நாளும் போராட்ட களத்துக்கு வரும் தன்னார்வலர்களை பொருத்து, அவர்களுக்கு பணிகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஒதுக்கின்றனர்.
போராட்டத்தில் தங்களுக்கு கிடைக்கும் அனுபவம் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறியது:
போராட்டத்தின் முதல் நாளை மிகுந்த வேதனையுடனே கடத்தினோம். ஏனெனில் சரியான குடிநீர், உணவு, படுக்கை, கழிப்பறை என எந்தவிதமான அடிப்படை வசதியும் கிடைக்காமல் வேதனையின் விளிம்புக்கு சென்றோம். ஆனால் செவ்வாய்க்கிழமை இரவு முதல் எங்களைத் தேடி நன்கொடையாளர்கள் வரத் தொடங்கினர்.
முதலில் சென்னையில் உள்ள பிரபலமான சில உணவகங்கள், உணவு பொட்டலங்களை வழங்கத் தொடங்கினர். அதற்கு அடுத்தப்படியாக சிலர் சேர்ந்து, 1300 போர்வை வாங்கிக் கொடுத்தனர். இவ்வாறாக ஒவ்வொரு நன்கொடையாளர்களாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தேவையான பொருள்களை தேடி,தேடி வாங்கிக் கொடுத்தனர்.
இருப்பினும் மொபைல் கழிப்பறை கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் போராட்டத்துக்கு வரும் பெண்களுக்கும் பெரும் சிரமத்துக்கு உள்ளனார்கள். இதைக் கருத்தில் கொண்டு 4 கழிப்பறைகளை ரூ.15 ஆயிரத்துக்கு வாடகைக்கு எடுத்தோம். ஆனாலும் நிலைமை சமாளிக்க முடியவில்லை. இதை தெரிந்துக் கொண்ட சில தனியார் கல்லூரிகள், தங்களது கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதி அளித்தனர். அதேபோல சில அரசு அதிகாரிகளும், தங்களது அலுவலக கழிப்பறையைத் திறந்துவிட்டனர்.
அங்கு துப்பரவுப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நாங்கள் ஊதியம் கொடுக்க முயன்றபோது, அவர்கள் கூட தங்களுக்கு ஊதியம் வேண்டாம் என கூறியது எங்களை மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றார் அவர். மாணவர்கள், இளைஞர்களின் தொடர் போராட்டமும், நன்கொடையாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வும்,தொழிலாளர்களின் ஊதியமில்லாத உழைப்பும் இந்த போராட்டத்தை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும் அவர் கூறினார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் நிறைவு பெற்ற பின்னர், மெரீனா கடற்கரை முழுவதையும் ஒரு வாரம் சுத்தம் செய்து, அதை புனரமைக்கும் பணியில் ஈடுபட போராட்டக் குழு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், போராட்டத்தினால் சேதமடைந்துள்ள பூங்காக்களையும், நடைமேடை உள்ளிட்ட சீரமைக்க முடிவு செய்துள்ளனர்.
4.5 லட்சம் உணவு பொட்டலம்
சென்னை மெரீனா கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் நான்கரை லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
இதுகுறித்த விவரம்:
சென்னை மெரீனா கடற்கரையில் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் 7 லட்சம் பேர் பங்கேற்றனர். இவ்வளவு பெரிய கூட்டத்தை மெரீனா கடற்கரையே இது வரை பார்த்திராத வேளையில், போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சற்று திகைக்கவே செய்தது.
இருப்பினும் நிலைமையைச் சமாளித்த போராட்டக் குழு, தங்களது நன்கொடையாளர்கள் மூலம் உணவு, குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தது. ஏனெனில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றதால், ஹோட்டல்களிலும் சாப்பிடுவதற்கு பொதுமக்களுக்கு வழியில்லாத காரணத்தினால் உணவு, குடிநீர் யாருக்கும் கிடைக்காமல் இருந்துவிடக் கூடாது என்பதில் போராட்டக் குழு தனிக் கவனம் செலுத்தியது.
இதன் விளைவாக வெள்ளிக்கிழமை நண்பகல் மட்டும் நான்கரை லட்சம் சாப்பாட்டு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இதேபோல இரவு மூன்று லட்சம் சாப்பாட்டு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. முன்னதாக கடந்த 3 நாள்களில் ஒவ்வொரு நாளும் ஒன்றரை லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

மைதானத்தில் சிதறிய குப்பைகளை அகற்றும் போராட்டக்குழுவினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com