புரட்சி என்ற அடைமொழி எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும்: நூற்றாண்டு விழாவில் தலைவர்கள் புகழாரம்

புரட்சி என்ற அடைமொழியைப் பெறும் தகுதி எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ளது என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்திய (இடமிருந்து) மா.சுப்பிரமணியன், நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன், ஜி.கே.வாசன், ஆர்.எம்.வீரப்பன், பழனி பெரியசாமி,
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்திய (இடமிருந்து) மா.சுப்பிரமணியன், நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன், ஜி.கே.வாசன், ஆர்.எம்.வீரப்பன், பழனி பெரியசாமி,

புரட்சி என்ற அடைமொழியைப் பெறும் தகுதி எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ளது என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.
எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை (ஜன.21) நடைபெற்றது.
விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது: இடஒதுக்கீட்டு பிரச்னை குறித்து ஒரு முறை அவரைச் சந்தித்தபோது எங்களது கோரிக்கை குறித்து என்னிடம் அக்கறையுடன் விசாரித்தார். ஈழத் தமிழர்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்த அவர், சென்னை துறைமுகத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் வந்திறங்கியபோது அதை எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். புரட்சி என்பதை ஒருவருக்கு அடைமொழியாக கூற வேண்டுமானால் அந்தத் தகுதி எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு.
எம்.ஜி.ஆர். கழக தலைவர் இராம.வீரப்பன்: இந்தியா முழுவதும் புகழ் பெற்ற நடிகர்கள் இருந்தார்கள். ஆனால், எம்.ஜி.ஆர். போன்று புகழ் பெற்றவர் யாரும் இல்லை. சென்னையில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பெயரில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதி இருப்பது போன்று "பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரன் நகர்' என்ற ஒரு சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்க வேண்டும். அது சத்யா ஸ்டுடியோ இருந்த இடத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் முன்வைக்கிறேன்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர்: ஆர்.எம்.வீ. முதல்வராக இருந்ததில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டபோது முதல்வருக்குரிய அனைத்துப் பொறுப்புகளையும் கவனித்த அனுபவம் பெற்றவர். கட்சியில் இருந்து ஒருவர் விலகினால்கூட எம்.ஜி.ஆரால் தாங்கிக் கொள்ள முடியாது. ஒருமுறை இரு தொண்டர்கள் கட்சிலிருந்து விலகியதை செய்தித்தாளில் பார்த்த அவர், இளைஞரணி பொறுப்பில் இருந்த என்னை அழைத்து, விலகிய தொண்டர்களை கட்சியில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். அந்தளவுக்கு தொண்டர்கள் மீது உயிரையே வைத்திருந்த மாபெரும் தலைவர் அவர்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: எம்.ஜி.ஆருக்கு அடித்தளமாக இருந்தது மக்கள்தான். அந்த அடித்தளத்தை வலுப்படுத்தியவர் ஆர்.எம்.வீ. முதல் தேர்தலில் தமிழக மக்கள் தேசியத்துக்காக வாக்களித்தனர். 1967 -ஆம் ஆண்டு முதல் திராவிடத்துக்காக வாக்களித்தனர். மூன்றாவதாக எம்.ஜி.ஆரை மட்டுமே நம்பி வாக்களித்தனர். ஏழைகளின் வாழ்வில் ஒளிதீபம் ஏற்றக்கூடிய பல திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவர் எதில் கால் வைத்தாலும் அதன் சிகரத்தைத் தொட்டார்.
பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்: காளைகள் வருமா வராதா என்று நாம் ஏங்கியிருந்த இந்த நேரத்தில், ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கும் வகையில் கையெழுத்தாகி அது அவசரச் சட்டமாக சனிக்கிழமை பாய்ந்து வர வாய்ப்புள்ளது. இதை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கூறுவது பெருமையாக உள்ளது. ஏனெனில் அவர் பெயரை உச்சரிக்கும் இடத்திலெல்லாம் அவரது ஆசி இருக்கும் என்றார்.
முன்னதாக நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன் விழாவுக்கு தலைமை வகித்தார். இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். படத்துக்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன், மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி, சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியன், தொழிலதிபர்கள் வி.ஜி.சந்தோஷம், பழனி ஜி.பெரியசாமி, ஜெம் வீரமணி, எம்.ஜி.ஆர். கழகப் பொருளாளர் டி.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com