அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடக்குமா?

அலங்காநல்லூரில் திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக சனிக்கிழமை இரவு பேச்சுவார்த்தை நடத்த வந்த மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்த போராட்டக்காரர்கள்.
ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக சனிக்கிழமை இரவு பேச்சுவார்த்தை நடத்த வந்த மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்த போராட்டக்காரர்கள்.

அலங்காநல்லூரில் திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பன்னீர்செல்வம் தொடங்கிவைக்கிறார் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான ஏற்பாடுகள் தயார் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்தாலும் போராட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாகவும், ஏற்பாடுகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாலும் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழக அரசின் உத்தரவின் பேரில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த கிராமங்களின் ஜல்லிக்கட்டு விழா குழுவினருடன் ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து, அலங்காநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 350 காளைகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிவாசல் பகுதியில் இருந்து காளைகள் வெளியேறும் பகுதி வரை இரு ஓரங்களிலும் 8 அடி உயரத்துக்கு இரண்டு அடுக்கு தடுப்புகள் அமைக்கப்படும். காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்கு 17 கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தயார் நிலையில் அரசுத் துறைகள்: ஜல்லிக்கட்டு நடத்த அனைத்துத் துறை அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர். 5 துணை ஆட்சியர்கள், 15 வட்டாட்சியர்கள் தலைமையில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 2500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஜல்லிக்கட்டை அனைத்துத் தரப்பினரும் பார்வையிடுóம் வகையில் 10 எல்இடி திரை அமைக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படும்.
அவனியாபுரம், பாலேமட்டில்...: அவனியாபுரத்தில் வரும் 25-ஆம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 27-ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல்,மாவட்டத்தில் உள்ள வேறு கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படும். இதற்காக அந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அனுமதி கோரினால், அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றார்.
அமைச்சர்கள் ஆலோசனை: முன்னதாக அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு கிராமங்களைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு கமிட்டியினருடன் தமிழக அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை திருப்பி அனுப்பிய போராட்டக்காரர்கள்: அலங்காநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பொதுப்பணித் துறை மூலமாக, 50 பணியாளர்கள், மாலை 5 மணிக்கு அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் தடுப்புகளை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கினர்.
இதையடுத்து கேட்டுக்கடை பகுதியில் போராட்டத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனல், பணிகள் தொடங்கிய அரை மணி நேரத்திலேயே நிறுத்தப்பட்டன.
அலங்காநல்லூர் கிராம ஜல்லிக்கட்டுக் குழு நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஏற்கவில்லை. அவசரச் சட்டம் தேவையில்லை, நிரந்தர அனுமதிக்கான சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். ஆனால், அவர்களது சமரசத்தை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் எதிர்த்து குரல் எழுப்பினர். அதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com