அவசரச் சட்டத்தின் அம்சங்கள் என்ன? ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்கம்

ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்டத்தில் இருக்கும் விவரங்கள் தொடர்பாக ஆளுநர் வித்யா சாகர் ராவ் விளக்கம் அளித்துள்ளார்.
அவசரச் சட்டத்தின் அம்சங்கள் என்ன? ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்கம்

ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்டத்தில் இருக்கும் விவரங்கள் தொடர்பாக ஆளுநர் வித்யா சாகர் ராவ் விளக்கம் அளித்துள்ளார்.
மிருகவதை தடுப்பு திருத்தச் சட்டம் 2017 (தமிழ்நாடு திருத்தம்) என்பதில் ஜல்லிக்கட்டு என்ற வார்த்தைக்கு விலக்கு அளிக்கப்பட்டு, மிருகவதை செய்யப்படாமல் பாதுகாப்பு அம்சங்களுடன் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் வழிவகை செய்கிறது. இதுகுறித்து ஆளுநர் வித்யா சாகர் ராவ் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் நடந்த போராட்டங்கள், கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழக் கூடிய தமிழர்கள் போராட்டத்துக்கு ஆதரவை அளித்துள்ளனர்.
சென்னை மெரீனா கடற்கரையில் முகநூல் நண்பர்கள், கல்லூரி மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என லட்சக்கணக்கானோர் தீவிரமாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
போராட்டங்களாலும், தமிழர்களின் உணர்வுகளை மதித்தும், அவர்களது கலாசார உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், மாநிலத்தில் இப்போதுள்ள சூழ்நிலை, சட்டம்-ஒழுங்கை சிறப்பான முறையில் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும் அவசரச் சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மத்திய அரசின் 1960-ஆம் ஆண்டைய 59-ஆவது மத்திய சட்டப்பிரிவான மிருகவதை தடுப்புச் சட்டத்தில் தமிழக அரசே திருத்தம் கொண்டு வருகிறது. அதன்படி, மிருகவதை தடுப்பு தமிழக திருத்த அவசரச் சட்டம் 2017 (தமிழ்நாடு திருத்தம்) என்பது கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, மிருகவதை தடுப்புச் சட்டத்தில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தையும், நாட்டு மாடுகளின் இனம் காக்கப்படுவதை உறுதி செய்திடவும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தச் சூழலில் அவசரச் சட்டம்? தமிழக சட்டப் பேரவை திங்கள்கிழமை காலை 10 மணிக்கு ஆளுநரால் கூட்டப்பட்டுள்ள நிலையில், அவசரச் சட்டத்துக்கு அவர் ஒப்புதல் அளிக்கலாமா என்ற கேள்வி எழுந்தது.
கூட்டத்தின் முதல் நாளில் இருந்து முடித்து வைக்கப்படும் வரையே கூட்டத் தொடராக கருதப்படும் என்றும் பேரவையைக் கூட்டினாலே அது கூட்டத் தொடர் தொடங்கியதாக கருதப்படாது என்றும் இதுபோன்ற தருணங்களில் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டதற்கான முன்மாதிரிகள் இருந்துள்ளன என்றும் ஆளுநருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
முக்கியமாக, மசோதாவைக் கொண்டு வந்து அதனை சட்டமாக்குவதற்கான முழுமையான அரசமைப்புச் சட்ட நடைமுறைகளை முடிப்பதற்கு மிகவும் நீண்ட காலம் எடுத்துகொள்ளும் என்பதாலும், தீர்வை எட்ட அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நடைமுறைக்கு ஆளுநர் திருப்தி தெரிவித்து ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அவசரச் சட்டத்துக்கு சட்டப் பேரவையில் முன்வைக்கப்பட்டு பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்.
இதனால், போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பி மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப வழிவகை செய்வர் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com