ஜல்லிக்கட்டு தடை நீங்கியது: அவசரச் சட்டம் பிறப்பித்தார் ஆளுநர்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கான தடை நீங்கியது. இதற்கான அவசரச் சட்டத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் சனிக்கிழமை மாலை பிறப்பித்தார்.
ஜல்லிக்கட்டு தடை நீங்கியது: அவசரச் சட்டம் பிறப்பித்தார் ஆளுநர்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கான தடை நீங்கியது. இதற்கான அவசரச் சட்டத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் சனிக்கிழமை மாலை பிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து, அலங்காநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.22) காலை 10 மணிக்கு நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த இயலாது என்ற நிலையில், மாநிலத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை நடத்தி நமது பண்பாட்டுச் சின்னத்தை காத்திட வேண்டும் என்ற நோக்கத்துடனும் அனைத்து முயற்சிகளையும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எடுத்து வந்தார்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்து வந்தது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு கொண்டு வந்த அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்தியது. முதல்வர் என்ற முறையில் நானும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
அவசரச் சட்டம்: இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகை தினத்தன்று ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் நடைபெறாத நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக அவசரச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த 19-ஆம் தேதி தில்லியில் பிரதமரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.
எனது கருத்துகளை கேட்டுக் கொண்ட பிரதமர், இந்தப் பிரச்னையில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்படாததைச் சுட்டிக் காட்டிய பிரதமர், தமிழக அரசு சட்ட ரீதியாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை அளித்தார்.
எனவே, தில்லியிலேயே தங்கியிருந்து மத்திய அரசின் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொண்டு அதன் மூலம் ஜல்லிக்கட்டு நடத்திட இயலுமா என்பது பற்றி சட்ட வல்லுநர்கள், அரசு உயரதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது. அதனடிப்படையில் மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்துக்கு மாநில அரசே திருத்தம் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டு, வரைவு சட்டத் திருத்தம் தில்லிலேயே தயார் செய்யப்பட்டது. இதை அவசரச் சட்டமாக பிறப்பிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி இந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசின் பரிந்துரை பெறப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும் என்பதால் அதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வெள்ளிக்கிழமை (ஜன.20) இரவு பெறப்பட்டது.
குடியரசுத் தலைவரால் உத்தரவு வழங்கப்பட்ட மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்துக்கான மாநில அரசின் சட்டத் திருத்தத்துக்கு ஆளுநரின் ஒப்புதல் சனிக்கிழமை பெறப்பட்டுள்ளது.
எனவே, ஜல்லிக்கட்டுக்கான அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகளின் தளைகள் அவிழ்க்கப்பட்டு விட்டன. அரசமைப்புச் சட்டப்படி அவசரச் சட்டத்துக்கு மாற்றாக சட்ட முன்வடிவு வரும் திங்கள்கிழமை (ஜன.23) தொடங்கவுள்ள பேரவை கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com