பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையுடன் நாளை தொடக்கம்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவின் உரையுடன், சட்டப்பேரவை கூட்டத்தொடர் திங்கள்கிழமை (ஜன.23) தொடங்குகிறது. இதற்காக, சட்டப்பேரவை அன்றைய தினம் காலை 10 மணிக்குக் கூடுகிறது.
பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையுடன் நாளை தொடக்கம்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவின் உரையுடன், சட்டப்பேரவை கூட்டத்தொடர் திங்கள்கிழமை (ஜன.23) தொடங்குகிறது. இதற்காக, சட்டப்பேரவை அன்றைய தினம் காலை 10 மணிக்குக் கூடுகிறது.
ஆளுநர் உரைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஜன.24) முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீது பேரவையில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் உரையாற்ற உள்ளனர். அதன்பின், இந்த இரங்கல் தீர்மானம் மௌன அஞ்சலி மூலமாக நிறைவேற்றப்படும்.
மேலும், மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி உள்ளிட்ட பலரது மறைவுக்கும் பேரவையில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட உள்ளன.
தலைவர்கள் இல்லாத பேரவை: ஜெயலலிதா மறைவுற்ற நிலையில், உடல்நலக் குறைவால் திமுக தலைவர் கருணாநிதியும் பேரவைக்கு வர முடியாத சூழல் உள்ளது. அதிமுக, திமுகவில் இருபெரும் தலைவர்கள் இல்லாத பேரவையாக 15 -ஆவது சட்டப்பேரவையின் 2 -ஆவது கூட்டத்தொடர் இருக்கப் போகிறது.
ஆனாலும், பிரதான எதிர்க்கட்சியின் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழகத்தின் பல முக்கிய பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு விவகாரம், வறட்சி பாதிப்பு, பேரவைக் குழுக்களை அமைக்காதது, குடிநீர் பிரச்னை உள்பட பல்வேறு முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்க கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனை நாள்கள்?: 15 -ஆவது சட்டப் பேரவையின் 2 -ஆவது கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி விவாதிக்க உள்ளது. இந்த ஆய்வுக் குழு கூட்டம் ஆளுநர் உரைக்குப் பிறகு திங்கள்கிழமையன்றே நடைபெறும். ஆளுநர் உரை, இரங்கல் தீர்மானங்களுக்குப் பிறகு, குடியரசு தின விடுமுறை வருகிறது. இதற்குப் பிறகு தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாள்கள் வரை பேரவை கூட்டத்தொடர் நடைபெறக் கூடும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com