லால்குடி அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே கீழரசூர் ஊராட்சியில் சனிக்கிழமை தடையை மீறி நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது, போலீஸார் தடியடி நடத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஜல்லிக்கட்டு வீரர்கள் காவல் துறை வாகனத்தின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர்.

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே கீழரசூர் ஊராட்சியில் சனிக்கிழமை தடையை மீறி நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது, போலீஸார் தடியடி நடத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஜல்லிக்கட்டு வீரர்கள் காவல் துறை வாகனத்தின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர்.

கீழரசூரில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஜல்லிகட்டு தொடங்கியது. இதில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட காளைகள் இறக்கிவிடப்பட்டன. இந்த காளைகளை அடக்க லால்குடி, புள்ளம்பாடி, டால்மியாபுரம், கல்லக்குடி, கல்லகம், மால்வாய், ஒரத்தூர், சில்லக்குடி, கீழரசூர், தென்னரசூர், மேலரசூர் போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து 5000-த்திற்கும் அதிகமான இளைஞர்கள் வந்திருந்து இந்த வீரவிளையாட்டில் பங்கேற்றனர்.
அப்போது லால்குடி காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில், கல்லக்குடி உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீஸார் ஒரு ஜீப்பிலும், நெடுஞ்சாலைத் துறை ரோந்து வாகனத்தில் 5-க்கும் அதிகமான போலீஸாரும் ஜல்லிக்கட்டு நடந்த வாடிவாசல் பகுதிக்கு சென்றனர். அவர்கள் கூட்டத்திற்குள் புகுந்து ஜல்லிக்கட்டு வீரர்கள் மீது தடியடி நடத்தினராம்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் தடியடி நடத்திய ஆய்வாளர் பாலாஜி உள்ளிட்ட போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதோடு போலீஸார் வந்த 2 ஜீப் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினராம். போலீஸாரின் இந்த நடவடிக்கைகளால் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் திருச்சி சிதம்பரம் சாலையின் குறுக்கே மரத்துண்டு, பாராங்கல் போன்றவற்றைப் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருச்சி சிதம்பரம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் சமரசம் ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com